பெ.பூவனூரில் உள்ள சுகாதார நிலையத்தை சீரமைத்து பயன்பாட்டுக்கு கொண்டுவர வலியுறுத்தல்

பெண்ணாடம், அக். 18: பெண்ணாடம் அடுத்த பெ.பூவனூர் ஊராட்சியில், 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இங்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் துணை சுகாதார நிலையம் கட்டப்பட்டது. இக்கிராமத்தை சுற்றியுள்ள தாழநல்லூர், கோனூர், வடகரை, அரிகேரி உட்பட 10க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்தவர்கள் தினமும் வந்து சிகிச்சை பெற்று வந்தனர்.நாளடைவில் சுகாதார நிலையம் பராமரிப்பின்றி பூட்டப்பட்டது. இதனால் இப்பகுதி மக்கள் இங்கிருந்து 5 கி.மீ தூரமுள்ள பெண்ணாடம், 10 கி.மீ தூரமுள்ள தொளார், 12 கி.மீட்டர் தொலைவில் உள்ள திட்டக்குடி என செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பெண்கள், முதியோர் மிகுந்த சிரமம் அடைகின்றனர்.

இது தொடர்பாக இப்பகுதி கிராமமக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை மனுக்கள் கொடுத்தும் எவ்வித பலனும் இல்லை என இப்பகுதி மக்கள் கூறுகின்றனர். கிராமமக்கள் நலன் கருதி பெ.பூவனூரில் பயன்பாடின்றி பாழடைந்து காட்சிபொருளாக உள்ள துணை சுகாதார வளாகத்தை சீரமைத்து மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: