வெள்ள, உபரி நீர் கடலில் கலக்கும் திட்டம் வெள்ள பாதிப்பு பெருமளவில் தடுக்கப்படும்

புவனகிரி, அக். 18: மழை காலங்களில் வெள்ள நீர் மற்றும் உபரி நீர் கடலூர் மாவட்டத்தின் வழியாக சென்று கடலில் கலக்கும் வகையில் திட்டம் ஒன்றை செயல்படுத்துவதற்கான ஆய்வுப் பணிகள் நடந்து வருகிறது. இந்த பணிகளுக்கு ஒப்புதல் அளித்து இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால் கடலூர் மாவட்டத்தில் பெருமளவில் வெள்ள பாதிப்பு தடுக்கப்படும் என மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ககன்தீப்சிங் பேடி தெரிவித்தார். தமிழக அரசின் வேளாண்மைத் துறை செயலாளராக உள்ள ககன்தீப்சிங்பேடி கடலூர் மாவட்டத்தின் கண்காணிப்பு அலுவலராகவும் உள்ளார். இவர் நேற்று கடலூர் மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வனுடன் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். புவனகிரி அருகே உள்ள ஆதிவராகநல்லூர் கிராமத்திற்கு வந்த அவர், அங்கு கடல் நீர் வெள்ளாற்றில் உட்புகுந்து உப்பு நீராக மாறி வருவதை தடுக்க கதவணை கட்ட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்த இடத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அங்கு அதிகாரிகளிடம் திட்டம் குறித்து ஆய்வு நடத்திய அவர், அங்குள்ள மக்களிடம் இந்த திட்டத்திற்காக விவசாயிகள் நிலம் வழங்க வேண்டியிருக்கும் என்பதை கூறினார். பின்னர் இத்திட்டம் நிறைவேற்றப்பட்டால் எப்படி செயல்படுத்தப்படும் என்பது குறித்த மாதிரி வரைபடத்தையும் அவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, புவனகிரி வர்த்தகர் சங்க தலைவர் சுப்பிரமணியன், புவனகிரி எதிர்ப்பு இயக்கத்தின் தலைவர் வழக்கறிஞர் குணசேகரன், பாசன விவசாயிகள் சங்க தலைவர் ரவீந்திரன் உள்ளிட்ட பல்வேறு பொதுநல சமூக அமைப்பினர் ககன்தீப்சிங்பேடியிடம், ஆதிவராகநல்லூர் கிராமத்தில் வெள்ளாற்றின் குறுக்கே கதவணை கட்டும் திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்க வேண்டும் என வலியுறுத்தி மனுக்களை அளித்தனர். இவற்றை பெற்றுக்கொண்ட ககன்தீப் சிங் பேடி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.இதையடுத்து புவனகிரி வட்டாட்சியர் அலுவலகத்தில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை குறித்த ஆய்வுக்கூட்டம் நடந்தது. அதில் அவர் பங்கேற்று, பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தார், இதில் ஈடுபடும் பணியாளர்கள் பாதுகாப்புடன் செயல்பட வேண்டும் என அறிவுரை வழங்கினார். நிகழ்ச்சியில் சிதம்பரம் சப்-கலெக்டர் விசுமகாஜன், புவனகிரி தாசில்தார் சத்யன் உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்றனர்இதை தொடர்ந்து செய்தியாளர்களிடம் ககன்தீப்சிங்பேடி கூறுகையில், புவனகிரி அருகே உள்ள ஆதிவராகநல்லூர் கிராமத்தில் கடல் நீர் ஆற்றில் உட்புகாமல் தடுக்க கதவணை கட்ட மக்கள் கோரிக்கை வைத்திருக்கின்றனர்.

 இதுகுறித்த ஆய்வை அரசு செய்து வருகிறது. சுமார் ரூ.95 கோடி திட்ட மதிப்பீட்டில் இதற்கான வரைவு திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. விரைவில் தமிழக அரசு இந்த திட்டத்திற்கு ஒப்புதல் அளித்து நிதி ஒதுக்கப்பட்டால், இதற்கான பணிகள் துவங்கும். பரங்கிப்பேட்டை-விருத்தாசலம் சாலையை தரம் உயர்த்தி அகலப்படுத்தும் பணிகள் நிறுத்தப்பட்டதால் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது. இந்த நிலையில், இந்த திட்டத்திற்கு அடுத்த மாதத்தில் புதிய ஒப்பந்த பணி ஆணை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.மழைக் காலங்களில் வெள்ள நீர் மற்றும் உபரி நீர் கடலூர் மாவட்டத்தின் வழியாக சென்று கடலில் கலக்கும் வகையில் திட்டம் ஒன்றை செயல்படுத்துவதற்கான ஆய்வுப் பணிகள் நடந்து வருகிறது என்றும், இந்த பணிகளுக்கு ஒப்புதல் அளித்து இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால் கடலூர் மாவட்டத்தில் பெருமளவில் வெள்ள பாதிப்பு தடுக்கப்படும் என்றார்.

Related Stories: