வடகிழக்கு பருவமழை துவங்கியதால் சம்பா சாகுபடிக்கு தேவையான உரம் தட்டுப்பாடின்றி வழங்க வேண்டும்

திருவாரூர், அக்.18: திருவாரூர் மாவட்டத்தில் நேற்று முதல் வடகிழக்கு பருவ மழை துவங்கியுள்ள நிலையில் சம்பா சாகுபடிக்கு தேவையான உரங்களை தட்டு பாடில்லாமல் வழங்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வந்தது. இந்நிலையில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் 17ம்தேதி துவங்கும் என சென்னை வானிலை மையம் தெரிவித்திருந்தது. திருவாரூர் மாவட்டத்தில் நேற்றுமுன்தினம் இரவு முதல் நேற்று அதிகாலை வரையில் மிதமான மழை பெய்தது. இதன் காரணமாக திருவாருரில் தெற்கு வீதி, பழைய பேருந்து நிலையம், ரயில்வே கீழ் பாலம் உட்பட பல்வேறு பகுதிகளில் மழை நீர் தேங்கியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் விஜயபுரத்தில் இயங்கி வரும் அரசு தாய் சேய் நல மருத்துவமனையை சுற்றி மழை நீர் தேங்கியதால் நோயாளிகள் பாதிக்கப்பட்டனர். மேலும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், பொதுமக்கள் என அனைவரும் மழையில் நனைந்தபடி சாலையில் செல்லும் நிலை ஏற்பட்டது. வடகிழக்கு பருவமழை துவங்கியதால் சம்பா சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ள போதிலும் சம்பா சாகுபடிக்கு தேவையான உரங்கள் தட்டுப்பாடு காரணமாக விவசாயிகள் கவலையில் இருந்து வரும் நிலை ஏற்பட்டுள்ளது. அதன்படி யூரியா, பொட்டாஷ் போன்ற உரங்கள் மாவட்டம் முழுவதும் தட்டுப்பாடு இருந்து வருவதால் மாவட்ட நிர்வாகமும், வேளாண்துறையும் உடனடியாக உரிய நடவடிக்கை எடுத்து உரங்கள் கிடைப்பதற்கு வழிவகை செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து வேளாண்மைத் துறை இணை இயக்குனர் சிவக்குமாரிடம் கேட்டபோது, சம்பா சாகுபடிக்கு தேவையான யூரியா உரம் 2 ஆயிரத்து700 மெட்ரிக் டன் அளவில் சென்னையிலிருந்து நாளை மறுதினம் (நாளை) 19ம் தேதி திருவாரூர் ரயில் நிலையத்திற்கு வந்தடைகிறது. இதில் நாகை மாவட்டத்திற்கு ஆயிரம் மெட்ரிக் டன் உரம் போக மீதமுள்ள ஆயிரத்து 700 மெட்ரிக் டன் உரம் திருவாரூர் மாவட்டம் முழுவதும் விநியோகிப்பதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். வலங்கைமான்: திருவாரூர் மாவட்டத்திற்கு உட்பட்ட மன்னார்குடி, நீடாமங்கலம், திருவாரூர் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாகவே மழை பெய்து வந்த நிலையில் வலங்கைமான் பகுதியில் மழை பெய்யவில்லை. இந்நிலையில் நேற்று மாலை திடீரென கனமழை பெய்தது. இதன் காரணமாக பள்ளி முடிந்து மாணவ, மாணவிகள் மழையில் நனைந்தவாறே வீடு திரும்பினர். கடந்த ஆண்டு வலங்கைமான் பகுதியில் அக்டோபர் மாதம் மூன்றாம் தேதி முதலே மழை பெய்தது. ஆனால் இந்த ஆண்டு வலங்கைமான் பகுதியில் கடந்த ஆண்டோடு ஒப்பிடுகையில் சுமார் பதினைந்து நாட்கள் கால தாமதமாகவே பருவமழை துவங்கியுள்ளது.

Related Stories: