சேமங்கோட்டை வில்லாயுதமுடைய அய்யனார் கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடத்த வலியுறுத்தி உண்ணாவிரதம்

அறந்தாங்கி, அக்.17:மீமிசல் அருகே சேமங்கோட்டை வில்லாயுதமுடைய அய்யனார் கோயிலில் கும்பாபிசேகம் நடத்த கோரி இந்து ஆலய பாதுகாப்பு இயக்கம் சார்பில் மீமிசலில் உண்ணாவிரதம் மேற்கொண்டனர். மீமிசலை அடுத்த சேமங்கோட்டை வில்லாயுதமுடைய அய்யனார், தூண்டி கருப்பர், ராக்காச்சி அம்மன் கோயிலில் கும்பாபிசேகம் செய்வதற்காக கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு கோயிலில் பாலாலயம் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து திருப்பணி வேலைகள் நடைபெறவில்லை. சேமங்கோட்டை வில்லாயுதமுடைய அய்யனார், தூண்டி கருப்பர், ராக்காச்சி அம்மன் கோவிலில் திருப்பணிகள் செய்து கும்பாபிசேகம் நடத்தக் கோரியும், திருப்பணி வேலைகளை செய்யாமல் கிடப்பில் போட்ட இந்து சமய அறநிலையத்துறையை கண்டித்தும் புதுக்கோட்டை மாவட்ட இந்து ஆலய பாதுகாப்பு இயக்கம், சேமங்கோட்டையைச் சேர்ந்த 11 கிராம சுற்றுவட்டார பொதுமக்கள் சார்பில் உண்ணாவிரதம் மீமிசலில் நடைபெற்றது. உண்ணாவிரதப் போராட்டத்திற்கு இந்து ஆலய பாதுகாப்பு இயக்க மாவட்ட தலைவர் ராமமூர்த்தி தலைமை வகித்தார். அகில பாரத துறவிகள் சங்க ராமானந்த சுவாமிகள், மாநில அமைப்பு செயலாளர் சுடலைமணி உள்ளிட்டோர் சிறப்புரையாற்றினர். உண்ணாவிரத போராட்டத்தில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: