ஆலங்குடியில் இருந்து புதுக்கோட்டைக்கு பேருந்து கூறையில் மாணவர்கள் அமர்ந்து செல்லும் அவலம் கூடுதல் பஸ்விட பொதுமக்கள் கோரிக்கை

புதுக்கோட்டை,அக்.17: காலை, மாலை நேரங்களில் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் ஆலங்குடியிலிருந்து புதுக்கோட்டைக்கு தொடர் பேருந்து இயக்க வேண்டும் என்று பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில் பணிபுரியும் அலுவலர்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், வியாபாரிகள் மற்றும் மருத்துவமனைகளுக்கு செல்லும் நோயாளிகள் என ஏராளமானோர் தினமும் காலை நேரங்களில் புதுக்கோட்டைக்கு செல்கின்றனர். அதேபோல மாலை நேரங்களில் புதுக்கோட்டையிலிருந்து ஆலங்குடிக்கு வருகின்றனர். ஆனால் இவர்கள் சென்று வர போதிய பஸ்வசதி இல்லை.  இந்நிலையில், ஆலங்குடியிலிருந்து மழையூர் வழியாக கறம்பக்குடி செல்லும் பேருந்துகளில் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்கள் அதிக அளவில் பஸ்சின் மேற்கூரையில் அமர்ந்தும், படிக்கட்டுகளில் தொங்கியபடி செல்கின்றனர். இதனை ஆலங்குடியின் பல்வேறு பகுதிகளில் நிற்கும் போக்குவரத்து போலீசார் கண்டுகொள்வதே இல்லை. மேலும், கூட்ட நெரிசலில் பெண்கள், குழந்தைகள், நோயாளிகள் என பேருந்தில் செல்லும் அனைவரும் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

இதனால் எந்த நேரத்திலும் அசம்பாவிதங்கள் நடக்கும் வாய்ப்புள்ளது. இந்நிலையில், கடந்த 2013-ம் ஆண்டு ஆலங்குடியில் போக்குவரத்து பணிமனை திறக்கப்பட்டது. அப்போது அதிக எண்ணிக்கையிலான பஸ்கள் பல்வேறு வழித்தடத்தில் பஸ்கள் இயக்கப்பட்டன. அதனால், ஆலங்குடியைச் சுற்றியுள்ள பல்வேறு கிராமத்தில் உள்ள பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் உட்பட அனைவரும் நிம்மதியடைந்தனர். ஆனால், தற்போது குறைந்த அளவிலான பஸ்கள் மட்டுமே இயக்கப்படுகின்றன. மேலும், இந்த பணிமனையில் இருந்து இயக்கப்படும் பஸ்களில் பிரேக் இல்லை, வைப்பர் இல்லை என பயணிகளுக்கு பாதுகாப்பற்ற நிலையில் அதிக எண்ணிக்கையிலான பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்த பேருந்துகள் ஆங்காங்கே பழுதாகி நிற்பது தொடர்கதையாகவே உள்ளது. மேலும், இந்த பேருந்து பணிமனையில் உள்ள பேருந்துகளை முறையாக பராமரித்து வழித்தடத்தில் தொடர் பேருந்து இயக்க வேண்டும் என்று சம்மந்தப்பட்ட நிர்வாகத்திற்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: