10 ஆண்டுகளாக பழுதடைந்த சாலையை சீரமைக்காத அதிகாரிகளை கண்டித்து மறியல் செய்ய திரண்ட வாலிபர்களால் பரபரப்பு போலீசார் குவிப்பு

திருமயம்,அக்.17: திருமயம் அருகே 10 ஆண்டுகளுக்கு மேலாக பழுதடைந்த சாலையை சீரைமைக்க நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளை கண்டித்து சாலை மறியல் செய்ய திரண்ட வாலிபர்களால் பரபரப்பு ஏற்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள ராயவரத்தில் இருந்து கானப்பூர் வழியாக காரைக்குடி செல்லும் சுமார் 6 கிலோ மீட்டர் சாலை 15 ஆண்டுகளுக்கு முன் சீரமைக்கப்பட்டது. பின்னர் இந்த சாலையை அதிகாரிகள் கண்டு கொள்ளாததால் சாலை சேதமடைந்து நாளுக்கு நாள் பழுதடைந்து பொதுமக்கள், வாகன ஓட்டிகள் பயன்படுத்த முடியாத நிலைக்கு சென்றது. இதனை சரி செய்ய ஆயிங்குடி, கானப்பூர், செட்டிபட்டி, ஆனைவாரி உள்ளிட்ட கிராம மக்கள் கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாக போராடி வருகின்றனர். இந்நிலையில் மக்கள் போராடும் போது சம்பவ இடத்திற்கு வரும் அதிகாரிகள் போராட்டகாரர்களை சமாதானபடுத்தும் வகையில் ஒரு மாதத்திற்குள் பழுதடைந்த ராயரவம்-காரைக்குடி சாலையை சரி செய்ய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துவிட்டு செல்வதும் அதன் பின்னர் அப்பகுதி மக்கள் ஏமாற்றம் அடைவதுமாக இருந்து வருகிறது. இதனிடையே தற்போது அப்பகுதியில் பெய்து மழை காரணமாக சாலையில் உள்ள பள்ளங்களில் நீர் தேங்கி குளம் போல் மாறி சாலை முழுவதும்சேறும் சகதியுமாக இருப்பதால் பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் சாலையை கடக்க கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.

இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி இளைஞர்கள் சிலர் சாலையை சீரமைக்காமல் காலம் தாழ்த்தும் அதிகாரிகளை கண்டிக்கும் விதமாக நேற்று ராயவரம் பஸ் ஸ்டாண்டு பகுதியில் சாலை மறியல் செய்யப்போவதாக சம்பந்தப்பட்ட கிராமங்களில் துண்டு பிரசுரம் வினியோகம் செய்தனர்.

இதனை அறிந்த அரிமளம் போலீசார் போராட்டத்தை தடுக்கும் வகையில் காலை முதலே ராயவரம் பகுதியில் குவித்தனர். இது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் காலை 9 மணியளவில் போரட்டம் நடத்த அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள், கிராமத்தார்கள் ராயவரம் பஸ் ஸ்டாண்டு பகுதியில் திரண்டனர்.

இதனை தொடர்ந்து போலீசார் நெடுஞ்சாலை துறை அதிகாரிகளை சம்பந்தப்பட்ட இடத்திற்கு வரவழைத்து போராட்டகாரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் அமைச்சர் சம்பந்தப்பட்டவர்கள் இந்த சாலையை சீரமைக்க கான்ட்ராக்ட் எடுத்துள்ளதாகவும் தற்போது வேறு பகுதியில் சாலை பணிகள் நடந்துவரும் நிலையில் அந்த பணிகள் முடிந்ததும் ராயரவம்-காரைக்குடி சாலை பணிகள் விரைவில் தொடங்க நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதை தொடர்ந்து அவர்கள் அனைவரும் கலைந்து சென்றனர்.

Related Stories: