காங்கயம் வட்டாரத்தில் கொசுப்புழு ஒழிக்கும் பணி

காங்கயம், அக். 17:  காங்கயம் வட்டாரப்பகுதியில் வீடு வீடாக சென்று கொசுப்புழு ஒழிக்கும் நடவடிக்கையில் சுகாதாரத்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். காங்கயம் அருகே உள்ள சாவடிப்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்தை சேர்ந்த வட்டார மருத்துவ அலுவலர் முரளி தலைமையில் மருத்துவர்கள் மற்றும் பணியாளர்கள் கிராமங்கள் தோறும் சென்று கொசுப்புழு ஒழிக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.  காங்கயம் வட்டாரத்தில் உள்ள ஆலாம்பாடி, கல்லேரி, சென்னிமலைகவுண்டன் வலசு, நெய்க்காரன்பாளையம், குப்பக்கவுண்டன், ஆண்டிமடக்காடு மற்றும் கத்தாங்கண்ணி, பாலசமுத்திரம்புதூர் உள்ளிட்ட கிராம பகுதிகளில் சாவடிப்பாளையம் ஆரம்பசுகாதார நிலைய வட்டார சுகாதார மேற்பார்வையாளர் பழனிசாமி, சுகாதார ஆய்வாளர் ரகுபதி மற்றும் 10க்கும் மேற்பட்ட பணியாளர்கள் வீடுவீடாக சென்று தண்ணீர் தொட்டிகளில் கொசுப்புழுக்கள் உள்ளனவா? என ஆய்வு செய்து, அதில் கொசுப்புழுக்கள் இருந்தால், அதை ஒழிக்க அபேட் மருந்து தெளித்தும், அதை சுற்றியுள்ள பகுதிகளில் பிளாஸ்டிக் கேன்கள் உள்ளிட்டவைகளில் மழை நீர் தேங்கி இருந்தால் அவற்றை அகற்றியும் வருகின்றனர்.

இந்நிலையில் கிராமங்கள் தோறும் நாளுக்கு நாள் கொசுத்தொல்லை அதிகமாகி விட்டதால் அவற்றை ஒழிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், முக்கியமாக கொசு ஒழிக்க சாக்கடை கால்வாய்களில் மருந்து தெளிக்க வேண்டும். அதே போல கொசுமருந்து கலந்த புகை அடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories: