திருப்பூர் தெற்கு, பல்லடம் பகுதிகளில் குடிமராமத்து பணிகளை ஆய்வு செய்த கலெக்டர்.

திருப்பூர், அக். 17: திருப்பூர் தெற்கு மற்றும் பல்லடம் பகுதிகளில் நடக்கும் குடிமராமத்து பணிகளை மாவட்ட கலெக்டர் நேற்று நேரில் சென்று ஆய்வு செய்தார். விவசாயிகள் பயன்பெறும் வகையில் இயற்கை வளங்களையும் மற்றும் நீர் ஆதாரங்களை பாதுகாக்கும் வகையில் தமிழக அரசு குடிமராமத்து திட்டப்பணிகளை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் திருப்பூர் மாவட்டத்திலுள்ள உடுமலை, மடத்துக்குளம், தாராபுரம், பல்லடம், காங்கயம், திருப்பூர் தெற்கு ஆகிய வட்டங்களில் உள்ள சுமார் 1,33,663 ஹெக்டர் பாசன நிலங்கள் பயன்பெறும் வகையில் 135 பணிகள் பொதுப்பணி மற்றும் நீர்வள ஆதாரத்துறையின் சார்பில் ரூ.15 கோடியில் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

திருப்பூர் தெற்கு வட்டம், கொடுவாய் பகுதியில் ரூ.19.50 லட்சம் மதிப்பிலும், பல்லடம் வட்டம் கொக்கம்பாளையம் பகுதியில் ரூ.14 லட்சம் மற்றும் கணபதிபாளையம் பகுதியில் ரூ.14.50 லட்சம் மதிப்பில் பல்லடம் மற்றும் திருப்பூர் தெற்கு ஆகிய வட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் பொதுப்பணித்துறை நீர்வள ஆதாரத்துறையின் சார்பில் மொத்தம் ரூ.48 லட்சம் மதிப்பீட்டில் குடிமராமத்து பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த குடிமராமத்து பணிகளை மாவட்ட கலெக்டர் விஜயகார்த்திகேயன் நேரில் சென்று ஆய்வு செய்தார். ஆழியார் வடிநில உப கோட்ட உதவி செயற்பொறியாளர் புவனேஷ்வரி, உதவி பொறியாளர் சக்தி குமார், இளம்பொறியாளர் சின்னராஜ், திருப்பூர் தெற்கு வட்டாட்சியர் மகேஷ்வரன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் மற்றும் விவசாயிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: