திருவாரூர் மாவட்டத்தில் மிதமான மழை: விவசாயிகள் மகிழ்ச்சி சாலையில் தண்ணீர் தேங்கியது

திருவாரூர், அக்.17: திருவாரூர் மாவட்டத்தில் நேற்று மிதமான மழை பெய்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.தமிழகத்தில் நடப்பாண்டில் ஏற்பட்ட கடும் குடிநீர் பஞ்சம் காரணமாக சென்னையில் பல்வேறு ஓட்டல்களில் உணவு சமைக்க முடியாத நிலை ஏற்பட்டது. மேலும் பல்வேறு தொழிற்சாலைகளும் நீரில்லாமல் மூடும் சூழல் ஏற்பட்டது. இதே போன்ற நிலை சென்னை மட்டுமின்றி மாநிலத்தின் பிற பகுதிகளிலும் ஏற்பட்டது. இந் நிலையில் கர்நாடக மாநிலத்தில் பெய்த கனமழை காரணமாக எதிர்பாராதவிதமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து சம்பா சாகுபடிக்காக மேட்டூர் அணையானது திறக்கப்பட்டு அதன்பின்னர் கல்லணையும் திறக்கப்பட்டது. இவ்வாறு மேட்டூர் அணை மற்றும் கல்லணை திறக்கப்பட்ட போதிலும் டெல்டா மாவட்டங்களில் பாசனவாய்க்கால்கள் மற்றும் வடிகால்கள் சரிவர தூர்வாராததன் காரணமாக ஆற்று நீர் பாசன வாய்க்கால்களை சென்றடையாமல் வீணாக கடலில் கலக்கும் நிலை ஏற்பட்டது. இதன் காரணமாக விவசாயிகள் சம்பா சாகுபடியை மிகவும் தாமதமாக தொடங்கிய போதிலும் அதற்குரிய நீர் கிடைக்காமல் தவித்து வந்தனர்.

இந்நிலையில் வெப்பச்சலனம் காரணமாக மாநிலம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது. இதற்கிடையை வடகிழக்கு பருவமழை அக்டோபர் 17ம்தேதி தொடங்கும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. ஆனால் இரண்டு நாட்களுக்கு முன்னதாகவே வடகிழக்கு பருவமழை துவங்கி தமிழகத்தின் பல பகுதியில் சுமார் ஒரு மணிநேரம் வரை பலத்த மழை கொட்டியது. இதில் பல இடங்களில் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. அதன்படி திருவாரூர் மாவட்டத்தில் நேற்று அதிகாலை முதல் மிதமான மழை பெய்தது. இந்த மழை காலை 11 மணி வரையில் மாவட்டம் முழுவதும் விட்டுவிட்டு பெய்த நிலையில் அதன் பின்னர் லேசான வெயில் அடித்தது. பின்னர் மாலை 6 மணி முதல் 9 மணி வரை மாவட்டம் முழுவதும் மிதமான மழை பெய்தது. இதன் காரணமாக சம்பா சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தொடர்ந்து மழை பெய்யும் என்பதால் குளிர்ச்சியான சீதோஷ்ண நிலவும் என்பதால் பொதுமக்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Related Stories: