சிறைவாசிகளால் பாதிக்கப்பட்ட 6 குடும்பத்தினருக்கு நிதியுதவி திருச்சி சிறைத்துறை டிஐஜி வழங்கினார்

திருச்சி, அக்.17: சிறைவாசிகளால் பாதிக்கப்பட்ட 6 குடும்பத்தினருக்கு திருச்சி சிறைத்துறை டிஐஜி நிதியுதவி வழங்கினார்.திருச்சி மத்திய சிறையில் உள்ள தண்டனை சிறைவாசிகளுக்கு சிறை விதிகளின்படி விசைத்தறி, தையற்கூடம், சோப்பு கூடம், காகிதக் கூடம், புத்தகம் கட்டுதல், சிறை அங்காடி, வெளி பணி குழு, குற்ற மேற்பார்வையாளர், குற்ற காவலர் என பல்வேறு பணிகள் ஒதுக்கப்பட்டு அங்கு அவர்கள் வேலை செய்வதற்கேற்ற ஊதியம் வழங்கப்படுகிறது. சிறைவாசிகளால் பாதிக்கப்பட்டோருக்கு அதில் ஒரு பகுதி பிடித்தம் செய்து அரசு கணக்கில் வைக்கப்பட்டு, பாதிக்கப்பட்டோர் குடும்பத்தினரின் வாழ்வாதாரத்திற்கும், அவர்களது வாரிசுகளுக்கு கல்வி செலவிற்கும் நலநிதியாக வழங்கப்படுகிறது.

அதன்படி திருச்சி, கரூர், பெரம்பலூர், அரியலூர் ஆகிய மாவட்டத்தை சேர்ந்த 6 குடும்பத்தினருக்கு மொத்தம் ரூ.30,000 வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. திருச்சி சிறைத்துறை டிஐஜி சண்முகசுந்தரம் பாதிக்கப்பட்ட குடும்பத்தாருக்கு உதவித்தொகை வழங்கினார். சிறை கண்காணிப்பாளர் சங்கர், திருச்சி மண்டல நன்னடத்தை அலுவலர் ஹாஜா கமாலுதீன் சாகீப், திருச்சி, பெரம்பலூர் லால்குடி நன்னடத்தை அலுவலர்கள் பங்கேற்றனர். தண்டனை சிறைவாசிகளால் உயிர் இழப்பு, உடல் உறுப்பு இழந்து பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் அரசின் நலநிதியை பெற, திருச்சி, உறையூர் நாச்சியார்பாளையம் நன்னடத்தை அலுவலகத்தை நேரிலோ அல்லது 0431-2765601 என்ற எண்ணிலோ தொடர்பு கொள்ள அறிவுறுத்தப்பட்டது.

Related Stories: