கோவை மாவட்டத்தில் 10 மாதத்தில் 56 குழந்தை தொழிலாளர்கள் மீட்பு

கோவை, அக். 17: கோவை மாவட்டத்தில் கடந்த 10 மாதத்தில் 56 குழந்தை தொழிலாளர்கள் மீட்கப்பட்டுள்ளனர். கோவை, திருப்பூர் மாவட்டங்களில் உள்ள கம்பெனிகள், நிறுவனங்களில் குழந்தை தொழிலாளர்களை பலர் பணியில் ஈடுபடுத்துகின்றனர். 14 வயதிற்குட்பட்ட தொழிலாளர்கள் குழந்தை தொழிலாளர்கள் எனவும், 15 முதல் 18 வயதிலான குழந்தைகள் வளர் இளம் பருவ தொழிலாளர்கள் எனவும் கருதப்படுகின்றனர். குழந்தை தொழிலாளர்களை பணியில் வைப்பது சட்டப்படி குற்றம். இது போன்ற குழந்தைகளை மீட்க தேசிய குழந்தை தொழிலாளர் மீட்பு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இவர்கள், கம்பெனிகள், தொழில் நிறுவனங்களில் ஆய்வு நடத்தி குழந்தை தொழிலாளர்களை மீட்டு வருகின்றனர். அதன்படி, கோவை மாவட்டத்தில் மாவட்ட கலெக்டர் உத்தரவின்பேரில் கடந்த ஜனவரி மாதம் முதல் தற்போது வரை 36 ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளது. இதில், மொத்தம் 429 நிறுவனங்களை அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளனர். இதில், 14 வயதிற்குட்பட்ட  8 ஆண், ஒரு பெண் உள்பட 9 பேரும், வளர்இளம் பருவத்தில் இருந்த 47 பேர் என மொத்தம் 56 குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளனர். இவர்களில் ஒருவர் மட்டுமே கோவையை சேர்ந்தவர். மீதமுள்ள 55 குழந்தைகளும் வெளிமாவட்ட மற்றும் வெளிமாநில குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது.

வடமாநிலத்தில் வேலை பற்றாக்குறை காரணமாக கோவைக்கு வரும் வட மாநிலத்தவர்கள் தங்களின் குழந்தைகளை நகைப்பட்டறை போன்ற பணிக்கு அனுப்புகின்றனர். இவர்கள் 2 அல்லது மூன்று வருடங்கள் பணியை கற்றுக்கொண்டு  மீண்டும் தங்களின் சொந்த ஊருக்கு சென்று பணி செய்வதாக தெரியவந்துள்ளது.  இது குறித்து தேசிய குழந்தை தொழிலாளர் முறை அகற்ற திட்ட இயக்குனர் விஜயகுமார் கூறியதாவது: மாவட்ட கலெக்டர் உத்தரவின்பேரில் கடந்த 10 மாதத்தில் 429 நிறுவனங்களில் ஆய்வு நடத்தி 56 குழந்தை தொழிலாளர்களை மீட்டுள்ளோம். மீட்கப்பட்ட குழந்தைகள், குழந்தைகள் நல குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். மேலும், சம்மந்தப்பட்ட நிறுவனங்களின் மீது தொழிலாளர் துறை மற்றும் தொழிலக பாதுகாப்பு துறை, சுகாதாரத்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். 14 வயதிற்குட்பட்ட குழந்தைகள் கல்வி கற்க வேண்டும் என்பது அரசின் கொள்கை. இதனை மீறி குழந்தைகளை தொழில்களில் ஈடுபடுத்தி வருகின்றனர். குடும்ப சூழல், வருமான தேவைக்காக இது போன்ற செயல்களில் குழந்தைகள் ஈடுபடுத்தப்படுகின்றனர். குழந்தை தொழிலாளர் சட்டம் கடுமையாக்கப்பட்டுள்ளது. குழந்தைகளை பணியில் ஈடுபடுத்தும் நிறுவனங்களுக்கு ரூ.20 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படுகிறது.

இதே தவறை 2வது முறை செய்தால் சம்மந்தப்பட்டவர்களுக்கு அபராதத்துடன் 3 ஆண்டுகள் சிறை தண்டனை அளிக்கப்படுகிறது. பண்டிகை காலங்கள், பள்ளி விடுமுறைகளில் குழந்தைகளை பணிக்கு அனுப்புகின்றனர். இதனால், அவர்களுக்கு படிப்பில் ஆர்வம் குறைகிறது. எதிர்காலம் பாதிக்கப்படுகிறது.  எனவே, குழந்தைகளின் நலன்கருதி 18 வயதிற்குட்பட்ட குழந்தைகளை பணியில் அமர்த்தக்கூடாது. குழந்தை தொழிலாளர்கள் குறித்த புகார்களை பொதுமக்கள் மாவட்ட கலெக்டருக்கு 0422-2305445 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். தவிர, மத்திய அரசின் www.pencil.gov.in என்ற இணையதளத்தின் மூலமாகவும் புகார் அளிக்கலாம். இந்த புகார்களுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: