மாநகராட்சி குப்பை கிடங்குகளில் 13 டன் உரம் தயாரிப்பு

ஈரோடு, அக். 17: ஈரோடு மாநகராட்சி குப்பை கிடங்குகளில் இருந்து தினமும் 13 டன் இயற்கை உரம் தயாரிக்கப்பட்டு வருகிறது. இதை விவசாயிகளுக்கு இலவசமாக பெற்றுக் கொள்ளலாம் என மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.  ஈரோடு மாநகராட்சி பகுதியில் உள்ள 60 வார்டுகளில் இருந்து சேகரிக்கப்படும் குப்பைகள் அனைத்தும் 19 இடங்களில் உள்ள மைக்ரோ கம்போஸ்டிங் சென்டர் மூலம் உரமாக்கப்பட்டு வருகிறது. இங்கு தினமும் 2 டன் அளவிற்கு குப்பைகள் சேகரிக்கப்பட்டு வருகிறது. மேலும், ஈரோடு கருங்கல்பாளையம் காவிரிக்கரை வைராபாளையத்தில் உள்ள குப்பை கிடங்கில் ராட்ச இயந்திரங்களை கொண்டு அங்குள்ள குப்பைகள் சல்லடை மூலம் சலிக்கப்பட்டு பின்னர், மக்கும் குப்பைகளை கொண்டு இயற்கை உரம் தயாரிக்கப்படுகிறது. மாநகராட்சி பகுதிகளில் சேகரிக்கப்படும் 220 டன் குப்பையில் 80 டன் மக்கும் குப்பையாகவும், மீதமுள்ள 140 குப்பைகள் மக்காத குப்பை, பிளாஸ்டிக், இரும்பு, கண்ணாடி, மண், கல், எலெக்ட்ரானிக் கழிவுகளாகவும் உள்ளது. மக்கும் குப்பைகளை உரமாக்கி விவசாயிகளுக்கு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மாநகராட்சி பகுதிகளில் சேரும் 80 டன் மக்கும் குப்பைகளை மக்க வைத்து அதை உரமாக்கும்போது அதில் இருந்து தினமும் 13 டன் அளவிற்கே இயற்கை உரம் தயாரிக்கப்படுகிறது. இங்கு தயாரிக்கப்பட்ட இயற்கை உரங்களை விவசாயிகளுக்கு இலவசமாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  அதன்படி, வைராபாளையத்தில் உள்ள உரம் தயாரிக்கும் மையத்தில் விவசாயிகளுக்கு இலவசமாக இயற்கை உரம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன் தலைமை தாங்கி விவசாயிகளுக்கு இயற்கை உரத்தை வழங்கினார்.

இதில், செயற்பொறியாளர் விஜயகுமார், உதவி செயற்பொறியாளர் கோபிநாத், சுகாதார அலுவலர் தங்கராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:

மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் மாநகராட்சி பகுதிகளில் குப்பை தொட்டிகள் அகற்றப்பட்டு வீடு, வீடாக குப்பைகள் சேகரிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு சேகரிக்கப்படும் குப்பைகளை இயற்கை உரமாக்கி விவசாயிகளுக்கு வழங்கும் வகையில் திட்டமிடப்பட்டது. வைராபாளையத்தில் உள்ள உரக்கிடங்கில் இதுவரை சுமார் 40 டன் இயற்கை உரம் தயாரிக்கப்பட்டு விவசாயிகளுக்கு 5 டன் அளவிற்கு வழங்கப்பட்டுள்ளது. மக்கும் குப்பைகள், காய்கறி கழிவுகளை கொண்டு இந்த இயற்கை உரத்தை தயாரிக்கும்போது விவசாயிகளுக்கும் பயனுள்ளதாக உள்ளது.  இந்த உரத்தை விவசாயிகள் பெற்றுக் கொள்ள மாநகராட்சி அலுவலகத்திற்கு நேரில் வந்து பதிவு செய்து அவர்களுக்கு தேவையான அளவு உரத்தை பெற்றுக் கொள்ளலாம். தற்போது, வைராபாளையம் உரக்கிடங்கில் 35 டன் அளவிற்கு இயற்கை உரம் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த உரம் தேவைப்படும், விவசாயிகள் ஆதார் அட்டையுடன் வந்து பெயர் பதிவு செய்து பெற்றுக் கொள்ளலாம்.

விவசாயிகளுக்கு இதுபற்றிய போதிய விழிப்புணர்வு இல்லாத நிலையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் நடத்தப்படும் வேளாண் குறைதீர்க்கும் கூட்டத்திற்கு வரும் விவசாயிகளை இங்கு அழைத்து வந்து காட்டவுள்ளோம். மேலும், இதுதொடர்பான விபரங்களுக்கு 180080042594890 என்ற இலவச தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related Stories: