பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் காத்திருப்பு போராட்டம்

ஈரோடு, அக். 17: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் வாழ்வுரிமை சங்கம் சார்பில் கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் நேற்று காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.சங்க தலைவர் ராஜரத்தினம் தலைமை தாங்கினார். கூட்டுறவு வங்கிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு வட்டியில்லா கடன் வழங்கப்படுகிறது. இதை பெற குறுகிய காலத்தில் நிபந்தனைகளை எளிதாக்கி கடன் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளின் குறைகளை தீர்க்க வாட்ஸ்-அப் எண், இ-மெயில் முகவரியை மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் பார்வைக்கு வைக்க வேண்டும். பல மாதமாக உதவித்தொகை பெற மனு அளித்து காத்திருக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் கேன்டீன் நடத்த அனுமதி வழங்க வேண்டும். ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து தாலுகா மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் கட்டப்படும் கடைகளில் ஒன்றை மாற்றுத்திறனாளிகளுக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும். ஈரோடு பஸ் ஸ்டாண்டில் சைக்கிள் ஸ்டாண்ட், கழிப்பிடம், கடைகள் ஒதுக்கீடு செய்யும்போது மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்தது. இது குறித்து தகவல் அறிந்து வந்த மாவட்ட வருவாய் அலுவலர் கவிதா, கோரிக்கைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இதையடுத்து, அனைவரும் கலைந்து சென்றனர்.

Related Stories: