இயந்திரத்தில் சிக்கி கை துண்டான ஊழியருக்கு ரூ.20 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்

ஈரோடு, அக்.17: ஈரோடு மாநகராட்சியின் உரம் தயாரிக்கும் இயந்திரத்தில் சிக்கி கை துண்டிக்கப்பட்ட துப்புரவு தொழிலாளிக்கு ரூ.20 லட்சம் இழப்பீடு, பணி நிரந்தரம் வழங்க வேண்டும் என தொழிற்சங்கங்கள் வலியுறுத்தி உள்ளன. ஈரோடு மாநகராட்சிக்கு சொந்தமான வைராபாளையம் குப்பை கிடங்கில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின்கீழ் மக்கும் குப்பையை மைக்ரோ கம்போஸ்டிங் முறையிலும், மக்காத குப்பைகளை தனியார் நிறுவனத்தின் மூலம் பயோமைனிங் முறையிலும் பிரிக்கப்பட்டு உரம் தயாரிக்கப்பட்டு வருகிறது. மைக்ரோ கம்போஸ்டிங் உரம் தயாரிக்கும் பணியில் மாநகராட்சியின் ஒப்பந்த துப்புரவு தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று முன்தினம் மக்கும் குப்பைகளை தரம் பிரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த ஈரோடு நாராயணவலசு திருமால்நகர் துப்புரவு காலனியை சேர்ந்த விஜயன் (37) என்ற தொழிலாளி மைக்ரோ கம்போஸ்டிங் அரவை இயந்திரத்தில் குப்பைகளை கைகளால் தள்ளி விட்டுக்கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக அவரது வலது கை இயந்திரத்தில் சிக்கி துண்டானது.

தற்போது விஜயன் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட துப்புரவு தொழிலாளி விஜயனின் குடும்பத்தினருக்கு தனியார் நிறுவனம் ரூ.20 லட்சம் இழப்பீடு வழங்குவதோடு, பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என தொழிற்சங்கங்கள் வலியுறுத்தி உள்ளன.

இது குறித்து தமிழ்நாடு தூய்மை பணியாளர்கள் சங்க மாநில தலைவர் ஈ.வி.கே.சண்முகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

உள்ளாட்சி அமைப்புகளில் துப்புரவு பணியாளர்களுக்கு எவ்வித பாதுகாப்பும் இல்லை. குறிப்பாக, பாதுகாப்பு பொருட்களான கையுறை, கால் உறை, மாஸ்க், லைப் ஜாக்கெட் என எதையும் உள்ளாட்சி அமைப்புகள் கொடுப்பதில்லை. உரம் தயாரிக்கும் இயந்திரத்தில் சிக்கி கை துண்டான துப்புரவு தொழிலாளி விஜயன், பணி நிரந்தரம் செய்யப்படாமல் தற்காலிக ஊழியராக உள்ளதால் எவ்வித இழப்பீடும் கிடைக்காமல் கைவிட்டு விடும் நிலை இருக்கக்கூடாது. எனவே, உடனடியாக சம்பந்தப்பட்ட உரம் தயாரிக்கும் தனியார் நிறுவனம் ரூ.20 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். மாநகராட்சி நிர்வாகம் பாதிக்கப்பட்ட ஊழியர் விஜயனை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

Related Stories: