ஈரோட்டில் கொள்ளையில் ஈடுபட்ட 4 கும்பல் பேர் கைது

ஈரோடு, அக்.17:ஈரோட்டில் பல்வேறு கொள்ளை மற்றும் வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்ட 4 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 60 பவுன் நகைகளை மீட்டனர். ஈரோடு டவுன் போலீஸ் சப்.டிவிசனுக்கு உட்பட்ட கருங்கல்பாளையம், சூரம்பட்டி, டவுன், ஜிஹெச், தாலுகா ஆகிய போலீஸ் எல்லைகளில் கடந்த சில மாதமாக பெண்களிடம் செயின் பறிப்பு, வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளையடிக்கும் சம்பவம் அதிகரித்தது. இந்த சம்பவங்களில் ஈடுபடும் நபர்களை பிடிக்க ஈரோடு எஸ்பி சக்திகணேசன் உத்தரவின் பேரில், டவுன் டிஎஸ்பி ராஜ் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

ஈரோட்டில் தொடர் கொள்ளையில் ஈடுபட்டதாக திருச்சி மாவட்டம் தொட்டியம்புத்தூர் சுரட்டைபாளையத்தை சேர்ந்த செல்வம் மகன் வீரமணி (26), நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு நாயக்கர் தெருவை சேர்ந்த நடராஜ் மகன் காமராஜ் (26), அவரது தம்பி விஜி (21), அதே பகுதியை சேர்ந்த நல்லப்பநாயக்கர் மகன் தங்கராசு என்ற முரட்டுக்காளை (40) ஆகியோரை தனிப்படை போலீசார் பிடித்து ரகசிய விசாரணை நடத்தி வந்தனர்.

இதில், கொள்ளை மற்றும் செயின் பறிப்பில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டனர். பின்னர், அவர்கள் அளித்த தகவலின் பேரில் அவர்களிடம் இருந்து 59.5 பவுன் நகைகளை போலீசார் மீட்டனர். இதையடுத்து, கொள்ளையர்கள் 4 பேர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைத்தனர்.

Related Stories: