டெங்கு காய்ச்சல் பரவுவதை தடுக்க இருப்பிடங்களை சுற்றி மழைநீர் தேங்காதவாறு பார்த்து கொள்ளுங்கள்பொதுமக்களுக்கு அறிவுரை

அரியலூர், அக். 17: டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த இருப்பிடங்களை சுற்றி மழைநீர் தேங்கதவாறு பார்த்து கொள்ள வேண்டுமென பொதுமக்களுக்கு அரியலூர் கலெக்டர் ரத்னா அறிவுரை வழங்கினார்.அரியலூர் கலெக்டர் அலுவலகத்தில் சுகாதாரத்துறை சார்பில் டெங்கு காய்ச்சல் தடுப்பு முன்னெச்சரிக்கை மற்றும் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து அலுவலர்களுடன் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. கலெக்டர் ரத்னா தலைமை வகித்து பேசியதாவது: வடகிழக்கு பருவமழை துவங்க உள்ளதால் இருப்பிடங்களை சுற்றி மழைநீர் தேங்காமல் பார்த்து கொள்ள வேண்டும். டெங்கு கொசு பரவாமல் இருக்க மாவட்ட நிர்வாகம் மூலம் பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

தொற்று நோய்கள் பரவாமல் தடுக்க சுகாதாரத்துறை அலுவலர்களுடன் இணைந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். டெங்கு காய்ச்சலை பரப்பும் ஏடிஎஸ் கொசுக்கள் உருவாகும் தூயநீர் தேங்கும் இடங்களான கழிவுநீர் மற்றும் தெளிந்த நீர்தேக்க தொட்டிகள், பயன்பாடற்ற பானைகள், உரல்கள், டயர்கள், தேங்காய் ஓடுகளை அப்புறப்படுத்த வேண்டும். கட்டிடங்கள் மேற்புறத்திலும், புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டிடங்களிலும் தண்ணீர் தேங்காமல் பார்த்து கொள்ள வேண்டும். குறிப்பாக குடிநீரை பொதுமக்கள் காய்ச்சி வடிக்கட்டி குடிக்க வேண்டும்.

அரியலூர் மாவட்டத்தில் கடந்த ஜனவரி 1 முதல் ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் தடை செய்யப்பட்டுள்ளது. எனவே இதை வியாபாரிகள் பயன்படுத்த வேண்டாம். பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக மாற்று பொருட்கள் தயார் செய்ய முக்கியத்துவம் வழங்க தன்னார்வலர்கள் முன்வர வேண்டும் என்றார். இதைதொடர்ந்து திருமானூர் ஊராட்சி ஒன்றியம் திருமழபாடி கிராமத்தில் டெங்கு காய்ச்சல் தடுப்பு முன்னெச்சரிக்கை பணிகள் மேற்கொள்வதை பார்வையிட்டார். கூட்டத்தில் ஊரக வளர்ச்சி திட்ட இயக்குனர் சுந்தர்ராஜன், சுகாதார பணிகள் துணை இயக்குனர் ஹேமசந்த் காந்தி மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.

Related Stories: