தேனியில் மின்வாரிய குப்பைகளை அகற்றுவது யார்?

தேனி, அக்.17: தேனியில் மின்தடை நாள் அன்று மின்வாரியம் லைன்களில் உரசும் மரங்களை வெட்டிப்போடும் குப்பைகளை அகற்றுவது யார் என்ற விநோத பிரச்னை எழுந்துள்ளது. தேனியில் மாதம் ஒரு நாள் மின்தடை நாள் அன்று பராமரிப்பு பணிகள் நடக்கும். அப்போது, மின்வாரிய ஊழியர்கள் மின்கம்பிகளில் உரசும் நிலையில் உள்ள மரக்கிளைகளை வெட்டிப்போடுவது வழக்கம். இப்படி ஒரே நாளில் வெட்டித்தள்ளும் குப்பைகள் மட்டும் பல டன்களை தாண்டும். நகராட்சி வழக்கமாக தினசரி சேகரிக்கும் குப்பைகளை விட, நான்கு மடங்கு அதிக குப்பைகளை மின்வாரியம் வெட்டித்தள்ளி விடுகிறது. இதனை அகற்ற முடியாமல் நகராட்சி துப்புரவு பணியாளர்கள் திணறிப்போய் விடுகின்றனர். இதனை மின்வாரியம் தான் அகற்ற வேண்டும். ஆனால் எங்கள் தலையில் கட்டி விடுகின்றனர் என நகராட்சி துப்புரவு பணியாளர்கள் புகார் எழுப்பி உள்ளனர்.இது குறித்து மின்வாரிய அதிகாரிகளிடம் கேட்ட போது, ‛மின்வாரியத்தில் ஹெல்ப்பர், வயர்மேன் பணியிடங்கள் அதிகளவு காலியாக உள்ளன. மாநிலம் முழுவதும் 40 ஆயிரம் பணியிடங்கள் காலியாக உள்ளன. தற்போதைய நிலையில் 10 பேர் தேவைப்படும் இடத்தில் இருவர் மட்டுமே பணிபுரிகின்றனர். இதனால் இவர்கள் பணிச்சுமையால் கடும் மனஉலைச்சலில் உள்ளனர். தவிர மின்வாரியத்திடம் சம்பளம் போடவே பணம் இல்லை. அந்த அளவு திவால் நிலைக்கு சென்று கொண்டுள்ளது. இதில் பராமரிப்பு பணி அன்று நாங்கள் வெட்டிப்போடும் குப்பைகளை அகற்ற வண்டி, ஆள்கள் எங்களிடம் இல்லை. இதனால் அப்படியே போட்டு விடுகிறோம். பல இடங்களில் மக்கள் நாங்கள் வெட்டிப்போடும் மரங்களில் கிளைகளை மட்டும் செதுக்கி எடுத்துச் செல்கின்றனர். இலைகளை ஒதுக்கி விடுகின்றனர். இந்த குப்பைகளை நகராட்சி தான் அகற்ற முடியும். வேறு வழியில்லை என்றனர்.

Related Stories: