விவசாயிகள் மகிழ்ச்சி 18ம் கால்வாயில் நாளை தண்ணீர் திறப்பு

கம்பம், அக்.17: தினகரன் செய்தியைத் தொடர்ந்து, 18ம் கால்வாயில் நாளை முதல் தண்ணீர் திறக்க அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் 18ம் கால்வாய் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். .உத்தமபாளையம், போடி வட்டத்தில் மழையை நம்பியுள்ள மானாவாரி நிலங்கள் பயன்பெறும் வகையில் 1999ல் அன்றைய முதல்வர் கருணாநிதியால் தொடங்கப்பட்ட திட்டம்தான் 18ம் கால்வாய் திட்டம். இத்திட்டப்படி லோயர்கேம்ப் தலைமதகிலிருந்து 40.80 கிலோமீட்டர் கால்வாய் வெட்டி, பெரியாற்று தண்ணீரை கூடலூர், கம்பம், பாளையம், தேவாரம் வழியாக சுத்தகங்கை ஓடைக்கு கொண்டு சென்று இணைக்கும் வகையில் திட்டம் தொடங்கப்பட்டது. மேலும் இக்கால்வாய் தண்ணீர் உத்தமபாளையம் மற்றும் போடி தாலுகாவிலுள்ள 44 கண்மாய்களில் நிரப்புவதால், நேரடியாக 4614.25 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும்.பெரியாறு அணையின் நீர்மட்டம் உயரும்போதும், அக்டோபர் முதல் தேதிக்குப்பின் பெரியாறு மற்றும் வைகை அணையின் இருப்புநீர் 6250 மில்லியன் கனஅடியாக இருந்தால், 18ம் கால்வாயில் தண்ணீர் திறக்க அரசாணை உள்ளது. அக்.1ல் பெரியாறு, வைகை அணைகளின் இருப்புநீர் 7088 மில்லியன் கனஅடி இருந்தும், 18ம் கால்வாயில் தண்ணீர் திறக்க அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. போதிய நீர் இருந்தும், 18ம் கால்வாய்க்கு தண்ணீர் திறக்காததது ஏன் என விவசாயிகள் அரசுக்கு கேள்வி எழுப்பினர். இதுகுறித்த செய்தி தினகரன் நாளிதழில் வெளியானது.

இந்நிலையில், விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று 18ம் கால்வாயின் கீழ் உள்ள 4614.25 ஏக்கர் ஒரு போக பாசன நிலங்களுக்கு, பெரியாறு அணையில் இருந்து நாளை முதல் 30 நாட்களுக்கு வினாடிக்கு 98 கனஅடி வீதம் மொத்தம் 255 மில்லியன் கன அடி தண்ணீர் திறந்து விட முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அதுபோல் கம்பம் பள்ளத்தாக்கில் உள்ள பிடிஆர் மற்றும் தந்தை பெரியார் வாய்க்கால்களின் கீழுள்ள ஒரு போக பாசன நிலங்களுக்கும் நாளை முதல் 120 நாட்களுக்கு பெரியாறு அணையில் இருந்து விநாடிக்கு 100 கனஅடி வீதம் மொத்தம் 1037 மில்லியன் கன அடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்துவிடவும் உத்தரவிட்டுள்ளார். இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Related Stories: