சிவகங்கையில் புதர்மண்டிக் கிடக்கும் பழைய அரசு மருத்துவமனை வளாகம் படையெடுக்கும் பாம்புகளால் பொதுமக்கள் அச்சம்

சிவகங்கை, அக். 17: சிவகங்கையில் புதர்மண்டிக் கிடக்கும் பழைய அரசு மருத்துவமனை வளாகத்தில் இருந்து பாம்புகள் படையெடுப்பதால், அருகில் உள்ள குடியிருப்புவாசிகள் அச்சத்தில் உள்ளனர். சிவகங்கையில் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை இயங்கி வந்தது. இந்த மருத்துவமனையை கடந்த 2011ல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துமனைக்கு இடம் மாற்றம் செய்தனர். பழைய அரசு மருத்துவமனை வளாகத்தில் ஹோமியோபதி மற்றும் சித்தா மருத்துவமனை, காச நோய் பிரிவுகள் மட்டும் இயங்கி வருகின்றன.பழைய அரசு மருத்துவமனையில் சுமார் 20க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் தனித்தனியே உள்ளன. கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக பராமரிப்பின்றி உள்ளதால் கட்டிடங்களை சுற்றிலும் புதர் மண்டிக்கிடக்கன்றன. எவ்வித பராமரிப்பும் இல்லாமல் இருப்பதால் கட்டிடத்தின் உள் மற்றும் வெளிப்பகுதிகள் சிதிலமடைய தொடங்கியுள்ளன. இந்த மருத்துவமனை கட்டிடங்களை சுற்றிலும் வீடுகள், கட்டிடங்கள் உள்ளன. மருத்துவமனை கட்டிட காம்பவுண்ட் சுவரையொட்டி தெற்கு பகுதியில் பார்வையற்றோர் பள்ளி உள்ளது. மருத்துவமனை வளாக புதர்களுக்குள் இருந்து பள்ளிக்குள் பாம்புகள் படையெடுத்து வருகின்றன.

நேற்று முன்தினம் இரவு பள்ளிக்குள் இருந்து தீயணைப்பு துறையினரால் சாரைப்பாம்பு பிடிக்கப்பட்டது. பார்வையற்றோர் பள்ளி என்பதால் பாம்புகள் வருவதை, அவர்களால் பார்க்க முடியாத நிலையில் ஏதேனும் அசம்பாவிதம நடைபெறும் நிலை உள்ளது. இதேபோல, இப்பகுதி வீடுகளுக்குள்ளும் பாம்புகள் புகுந்து வருகின்றன. எனவே, மருத்துவமனை வாளாகத்தில் உள்ள புதர்களை சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

இப்பகுதி பொதுமக்கள் கூறியதாவது: தற்போது மருத்துவமனை வளாகம் பயன்படுத்தப்படாமல் பராமரிப்பின்றி சமூக விரோத செயல்கள் நடக்கும் இடமாக உள்ளது. கட்டிடங்கள் அனைத்தும் பராமரிப்பின்றி புதர் மண்டிக்கிடக்கிறது. சில கட்டிடங்களில் மட்டுமே சில பிரிவுகள் இயங்கி வருகின்றன. மற்ற கட்டிடங்கள், புதர்களில் இருந்து பாம்புகள், பூச்சிகள் இப்பகுதி முழுவதும் செல்கின்றன. புதர்களை அகற்றி, பழைய மருத்துவமனை கட்டிடங்களில் வாடகை அரசு அலுவலகங்களை இடமாற்றம் செய்ய வேண்டும்’ என்றனர்.

Related Stories: