அறிவிப்பு இல்லாமல் மின்தடை மின்சார வாரிய அலுவலகம் முற்றுகை

பரமக்குடி, அக்.17: நயினார்கோவில் பகுதியில் தொடர்ந்து அறிவிப்பு இல்லாமல் அடிக்கடி மின்சாரம் தடை செய்யப்படுவதை கண்டித்து, பொதுமக்கள் மின்சார வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பரமக்குடி அருகே நயினார்கோவில் ஒன்றியத்தில் நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் தொடர்ந்து மின்சாரம் தடை செய்யப்பட்டு வருகிறது. எந்த முன்அறிவிப்பு இல்லாமல் தினமும் காலை, மாலை நேரங்களில் மின்சாரம் தடை செய்யப்படுகிறது. இதனால் பள்ளி செல்லும் மாணவர்கள்,கர்ப்பிணிகள் மற்றும் முதியவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.மேலும் தற்போது மழை காலம் தொடங்கி விட்டதால் இரவு நேரங்களில் விஷ ஜந்துகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. நயினார்கோவில் பொதுமக்கள் முன்அறிவிப்பு இல்லாத மின்தடையால் வீட்டிற்குள் தூங்க முடியாமல் வெளியில் தூக்கத்தை தொலைத்து நிற்கின்றனர். சிறு குறு தொழில் செய்பவர்கள் மற்றும் அரசு அலுவலகங்களில் அன்றாட பணிகளை செய்ய முடியாமல் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகளுக்கு புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என பொதுமக்கள் தரப்பில் குற்றம்சாட்டுகின்றனர். இந்நிலையில் நயினார்கோவில் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நேற்று மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, அதிகாரிகள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் முறையாக முன்அறிவிப்பு இல்லாமல் தடை செய்ய மாட்டோம் என்று உறுதியளித்தனர். இதனையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.

Related Stories: