சிலிண்டர் விபத்தில் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூ.13.78 லட்சம் இழப்பீடு முதல் தவணையை கலெக்டர் வழங்கினார்

திண்டுக்கல், அக். 17: திண்டுக்கல் மேற்கு வட்டம், சிந்தலக்குண்டு அருகே அனுமந்தராயன் கோட்டையில் கடந்த 19.5.2018 அன்று ஒரு வீட்டில் ஏற்பட்ட சிலிண்டர் விபத்தில் அருள்மேரி, அவரது கணவர் அற்புதம் ஆகியோர் இறந்துவிட்டனர். இந்த சம்பவத்தில் வீடு சேதமடைந்து, அவர்களது மகன்களில் ஒருவரான மரிய ஆல்வின் டைட்டஸ் என்பவருக்கு காயம் ஏற்பட்டது. இந்த விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீட்டு தொகையாக மொத்தம் ரூ.13,78,500 இன்சூரன்ஸ் தொகையாக (இரு நபர்களுக்கு தலா ஆறு லட்சம் வீதம் ரூ.12 லட்சம் மற்றும் பொருட்சேதம், சிறு காயம்) இன்சூரன்ஸ் நிறுவனம் ஒப்பளிப்பு செய்து வழங்கியுள்ளது. அதில் முதல் தவணையாக ரூ.1,94,625க்கான காசோலையை பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. கலெக்டர் விஜயலட்சுமி பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு இழப்பீட்டு தொகையை வழங்கினார்.  இறந்தவர்களின் 3 குழந்தைகளும் மைனர்கள் என்பதால், மீதி தொகையை மைனர்களின் பாட்டி ரோசம்மாள் என்பவரிடம் வழங்குவதற்கான பாதுகாவலர் ஆணை வர பெற்றதும் நிலுவைத்தொகை ரூ.12 லட்சம், பாதுகாவலர் பெயரில் வங்கியில் வைப்பு தொகையாக டெபாசிட் செய்யப்பட உள்ளது. உடன் திண்டுக்கல் மாவட்ட வருவாய் அலுவலர் வேலு இருந்தார்.

Related Stories: