பட்டாசு விற்பனைக்கு தடையில்லா சான்று கேட்டு 460 பேர் விண்ணப்பம்

சேலம், அக் 17: தீபாவளியை முன்னிட்டு பட்டாசு விற்பதற்கு தடையில்லா சான்று கேட்டு தீயணைப்புத்துறையினரிடம் 460 பேர் விண்ணப்பித்துள்ளனர். மேலும், பாதுகாப்பாக பட்டாசு வெடிக்க மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தீயணைப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். தீபாவளிக்கு இன்னும் பத்து நாட்களே இருக்கும்பட்சத்தில் பட்டாசு விற்பனை சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. பட்டாசு கடை வைக்க மாநகர போலீஸ் கமிஷனரிடம் லைசென்ஸ் பெற வேண்டும். தீயணைப்புத்துறையினரிடம் தடையில்லா சான்று பெற வேண்டும். மாவட்ட பகுதியில் பட்டாசு கடை வைக்க மாவட்ட வருவாய் அலுவலரிடம் லைசென்ஸ் பெற வேண்டும். தீபாவளி பண்டிகை நெருங்குவதையொட்டி சேலம் மாவட்டத்தில் 460க்கும் மேற்பட்டவர்கள், பட்டாசு விற்பதற்கான தடையில்லா சான்று கேட்டு, மாவட்ட தீயணைப்புத்துறை அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளனர். இந்த விண்ணப்பங்களை தீயணைப்புத்துறை அதிகாரிகள் பரிசீலித்து வருகின்றனர்.

இதுகுறித்து தீயணைப்புத்துறை அதிகாரிகள் கூறுகையில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசு கடை வைக்க பல்வேறு விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளது. பட்டாசு கடை வைப்போர் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பட்டாசு பயன்படுத்தும் பொதுமக்கள் மருத்துவமனை, பெட்ரோல் பங்க், மண்ணெய்ணெய் கடை உள்ளிட்ட பகுதிகளில் பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும். வெடிக்காத பட்டாசுகளை கையில் எடுக்கக்கூடாது. குடியிருப்பு பகுதியில் ராக்கெட் வெடிக்கக்கூடாது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு விபத்தில்லா தீபாவளி கொண்டாடுவது குறித்து பள்ளி, கல்லூரிகளில் தீயணைப்புத்துறை சார்பில் மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த இருக்கிறோம் என்றனர்.

Related Stories: