மதிப்பெண்ணுக்காக மாணவர்கள் படிக்கும் நிலை மாற வேண்டும்

நாமக்கல், அக். 17: மதிப்பெண்ணுக்காக மாணவர்கள் படிக்கும் நிலை மாற வேண்டும் என, நாமக்கல் அரசு பள்ளியில் நடந்த அறிவியல் கண்காட்சியில் கலெக்டர் பேசினார்.நாமக்கல் அரசு ஆண்கள் தெற்கு மேல்நிலைப்பள்ளி கலையரங்கில், மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சி நேற்று நடைபெற்றது. இதில் 30 பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவியர் தங்களின் அறிவியல் படைப்புகளை பார்வைக்கு வைத்திருந்தனர். மாவட்ட கலெக்டர் மெகராஜ், அறிவியல் கண்காட்சியை தொடங்கிவைத்து பேசியதாவது: இயற்பியல் கோட்பாடுகள், தத்துவங்களை சொல்லித் தருகிறேன் என இயற்பியல் ஆசிரியர் கூறினால், அவரிடம் மாணவர்கள் வருவதில்லை. இயற்பியலில் எளிதாக 100க்கு 95 மதிப்பெண் எடுக்க வைக்கிறேன் என கூறும் ஆசிரியரிடம் தான் மாணவர்கள் அதிகம் செல்கிறார்கள். இந்த நிலை மாற வேண்டும். மாணவர்கள் அறிவை வளர்த்து கொண்டால், மதிப்பெண் தானாக தேடி வரும். அறிவை வளர்த்து கொள்ளாவிட்டால், மதிப்பெண் அதிகம் எடுத்தும் பயனில்லை. மதிப்பெண்ணுக்காக மாணவர்கள் படிக்கக்கூடாது. ஒவ்வொரு நாளும் அறிவை வளர்த்து கொள்ளும் நோக்கில் படிக்க வேண்டும். இதன் மூலம் தான் வாழ்க்கையில் உயர்ந்த நிலைக்கு வரமுடியும். இவ்வாறு அவர் பேசினார்.நிகழ்ச்சியில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உஷா, மாவட்ட கல்வி அலுவலர் உதயக்குமார், முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர்கள் மணிவண்ணன், குமார், தெற்கு பள்ளி தலைமை ஆசிரியர் கேசவன், முதுகலை ஆசிரியர் மகேஸ்குமார், பிஆர்ஓ சீனிவாசன், பள்ளி துணை ஆய்வாளர் பெரியசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.கண்காட்சியில் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்த  அறிவியல் படைப்புகளில், சிறந்த 3 படைப்புகளை நடுவர் குழு தேர்வு செய்தது. இவர்கள் மாநில அளவில் சென்னையில் நடைபெறும் அறிவியல் கண்காட்சியில் பங்கேற்க தேர்வு செய்யப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டு மாநில அளவிலான அறிவியல் கண்காட்சியில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவியருக்கு கலெக்டர் பரிசு வழங்கி பாராட்டினார்.

Related Stories: