தர்மபுரியில் அரசு முதன்மை செயலாளர் ஆய்வு

தர்மபுரி, அக்.17: தமிழக அரசின் தகவல் தொழில்நுட்பத்துறை அரசு முதன்மைச் செயலாளரும், தர்மபுரி மாவட்ட கண்காணிப்பு அலுவலருமான டாக்டர் சந்தோஷ்பாபு,மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும், நீர் மேலாண்மை திட்டங்கள் மற்றும் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து, கலெக்டர் மலர்விழியுடன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றியம், அப்புசமுத்திரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு நேரில் சென்று மாணவர்களிடையே உரையாடினார். பள்ளியை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும் என்றும், தன் சுத்தத்தை அனைத்து மாணவ, மாணவிகளும் பேண வேண்டும் என்றார். மேலும் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறை சார்பில் 1.05 லட்சம் தூய்மை தூதுவர் அடையாள அட்டைகள் வழங்கும் பணியை பள்ளி மாணவ, மாணவிகளுக்கு வழங்கி தொடங்கி வைத்தார். பின்னர் நல்லம்பள்ளி ஒன்றியம் பாளையம்புதூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை நேரில் சென்று பார்வையிட்டு காய்ச்சலுக்கு அளிக்கப்படும் சிறப்பு சிகிச்சைகளை நேரில் ஆய்வு செய்தார். மருந்து கிடங்கு, தடுப்பு மருந்து கிடங்கு, உள்நோயாளி பிரிவு, பிரசவ அறை, கழிவறை,  ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அதன்பின், அன்னசாகரம் ஏரியில் ரூ.70 லட்சம் மதிப்பில்  மேற்கொள்ளப்பட்டுவரும் குடிமராமத்து பணிகளை நேரில் பார்வையிட்டார். பின்னர் தர்மபுரி நகராட்சி அலுவலகத்தில், இ&-சேவை மைய செயல்பாடுகள், குமாரசாமிபேட்டை உள்ளிட்ட பகுதிகளை தூய்மை பணிகளை ஆய்வு செய்தார். அதன்பின்னர் பென்னாகரம் சருக்கல்பாறை மலைபகுதியில் குகைகளில் வசித்து வந்து மலைவாழ் மக்களுக்கு கூத்தப்பாடி ஊராட்சி சருக்கல்பாறை கிராமத்தில் தலா ₹2.10 லட்சம் மதிப்பில் 24 பசுமை வீடுகள் கட்டப்பட்டுள்ளதை பார்வையிட்டு அதில் சூரிய சக்தி வசதியுடன் மின்சார வசதி செய்து தரவும் வட்டார வளர்ச்சி அலுவலருக்கு உத்தரவிட்டார். மேலும் மலைவாழ் மக்களை நேரில் சந்தித்து விலையில்லா ஆடுகள், மாடுகள் வழங்கிட நடவடிக்கை  எடுக்கப்படும் என்றார்.    அதனை தொடர்ந்து தர்மபுரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட நிர்வாகம் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் டெங்கு தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், நீர் மேலாண்மை திட்டங்கள் மற்றும் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து தமிழக அரசின் தகவல் தொழில்நுட்பத்துறை அரசு முதன்மைச் செயலாளரும், தர்மபுரி மாவட்ட கண்காணிப்பு அலுவலருமான டாக்டர் சந்தோஷ்பாபு தலைமையில் நடந்தது. மாவட்ட கலெக்டர் மலர்விழி முன்னிலை வகித்தார்.

சந்தோஷ்பாபு பேசுகையில்,பொதுமக்கள் காய்ச்சல் ஏற்பட்டால் மருந்து கடைகள், போலி மருத்துவர்களை அணுகி சிகிச்சை பெறவேண்டாம். அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம், அரசு மருத்துவமனை, தர்மபுரி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெறவேண்டும். போலி மருத்துவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தினார். பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கிடவும், சிறப்பு மருத்துவ முகாம்கங்கள் நடத்திடவும் அறிவுறுத்தினார். வடகிழக்கு பருவமழை துவங்கவுள்ளதால் மேற்கொள்ளப்படவேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்தும் கேட்டறிந்தார்.  

Related Stories: