கடையத்தில் சேதமடைந்த கழிவு நீரோடையால் மக்கள் பாதிப்பு

கடையம், அக். 17: கடையத்தில் கழிவு நீரோடை பல ஆண்டுகளாக சிதலமடைந்து கிடப்பதால் மக்கள் பாதிப்பிற்குள்ளாகி வருகின்றனர். கடையம் யூனியனுக்கு உட்பட்டது தெற்கு கடையம் ஊராட்சி. இங்குள்ள தெற்கு தெருவில் வரம்தரும் விநாயகர் கோயில்முன்பு உள்ள கழிவு நீரோடை இடிந்து விழுந்து பல ஆண்டுகள் ஆகின்றன. இதுகுறித்து ஊராட்சி அதிகாரிகளிடம் பொதுமக்கள் பலமுறை புகார் அளித்துள்ளனர். சேதமடைந்த ஓடை அருகில் சின்டெக்ஸ் குடிநீர் தொட்டி உள்ளது. மேலும் அருகில் தாமிரபரணி கூட்டு குடிநீர் நல்லியும் உள்ளது. இங்கு தண்ணீர் பிடிக்க வரும் பெண்கள் இடிந்து கிடக்கும் கழிவு நீரோடையால் பெரிதும் பாதிக்கபட்டு வருகின்றனர்.

இந்த வழியை கருப்பசாமி கோயில் தெரு, கர்ணன் தெரு, சொரிமுத்து பிள்ளை தெரு, யோகீஸ்வரர் தெரு ஆகிய பகுதியை சேர்ந்த மக்கள் தினந்தோறும் பயன்படுத்தி வருகின்றனர். இவ்வழியாக செல்லும் பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள் கடும் பாதிக்கபட்டு வருகின்றனர். இங்கு வாகனங்கள் செல்லும் போது வழி விடுவதற்காக ஒதுங்கும் பொதுமக்கள் பள்ளத்தில் விழும் அபாய நிலை உள்ளது. இந்த ஓடையை சீரமைப்பதற்கு நிதி ஓதுக்கி விட்டதாகவும், பொறியாளர் தாமதத்தால் தான் பணி தொடங்காமல் கிடப்பில் போட்டதாக கூறப்படுகிறது. எனவே  மாவட்ட நிர்வாகம் இதில் தலையிட்டு சேதமான கழிவு நீரோடையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Related Stories: