முதலமைச்சரின் குறை தீர்ப்பு முகாமில் மனுக்களுக்கு பதிலளிப்பதில் அலட்சியம் வாக்குசாவடி கேட்டவருக்கு, வீட்டுமனை இல்லை என்று நிராகரிப்பு

நாகர்கோவில்:  நாகர்கோவிலில் நடந்த முதல்வரின் குறை தீர்ப்பு முகாமில் தங்கள் பகுதிக்கு பொது வாக்கு சாவடிவேண்டும் என்று கேட்டவருக்கு, வீட்டுமனை வழங்க இயலாது என்று அதிகாரிகள் பதிலளித்து இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பொதுமக்களின் குறைகளை தீர்க்கும் வகையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவின் பேரில் தமிழகம் முழுவதும் முதலமைச்சரின் குறை தீர்க்கும் முகாம்கள் நடத்தப்பட்டன. குமரி மாவட்டத்திலும் கடந்த ஆகஸ்ட் மாதம் இந்த முகாம்கள் நடந்தன. இதற்காக தாலுகா அலுவலகங்கள், கிராம நிர்வாக அலுவலகங்களில் மக்களிடம் இருந்து அதிகாரிகள் மனுக்கள் பெற்றனர். இந்த மனுக்கள் அனைத்தும் முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உடனடியாக பிரச்னை தீர்க்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.இதனால்  மாவட்ட கலெக்டர் பொதுமக்கள் தங்கள் குறைகளை குறை தீர்க்கும் முகாமில்  தெரிவிக்கலாம் என்று அறிவித்து இருந்தார்.  இந்த அறிவிப்புக்கு ஏற்ப முதல்வரின் குறை தீர்க்கும் முகாமில் ஏராளமான மனுக்கள் குவிந்தன. 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மனுக்கள் குவிந்ததாக அறிவிக்கப்பட்டது. இந்த முகாமில் அளிக்கப்பட்ட மனுக்களுக்கு ரசீதும் கொடுத்து இருந்தனர்.

அதன்படி நாகர்கோவில் டவுன் ரயில்வே நகர் பகுதியை சேர்ந்த மோகன் என்பவர், புத்தேரி கிராமத்தில் நடந்த முதல்வரின் குறை தீர்க்கும் முகாமில் ஒரு மனு அளித்திருந்தார். அதில் நாகர்கோவில் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ராஜாக்கமங்கலம் ஒன்றியம் கணியாகுளம் ஊராட்சி மன்றம் 4, 5 வார்டுகளில் உள்ள வாக்காளர்கள் சுமார் 5 கி.மீ. தூரம் நடந்து சென்று ஆனைப்பொத்தை பகுதி மற்றும் கணியாகுளம் பகுதியில் உள்ள வாக்குசாவடிகளுக்கு சென்று வாக்களிக்க வேண்டிய நிலை உள்ளது. இதனால் அதிகப்படியான வாக்காளர்கள் வாக்களிக்க செல்வது இல்லை. எனவே அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்ற உரிைமயின் படி, இரு வார்டுகளையும் இணைத்து பொது வாக்குசாவடியை நாகர்கோவில் டவுன் ரயில்வே நகர் பகுதியில் உள்ள ஒரு கட்டிடத்தில் அமைக்க வேண்டும் என கூறி இருந்தார்.

இந்த மனுவை பெற்ற அதிகாரிகள் உடனடியாக அதற்கான ரசீது அளித்தனர். மனு எண் 114 ஆகும். தற்போது இதற்கு அதிகாரிகள் பதிலளித்துள்ளனர். இந்த பதில் ஆன்லைனிலும் பதிவிடப்பட்டு உள்ளது. இந்த பதிலை பார்த்ததும் மோகன் அதிர்ச்சி அடைந்தார். அதில் நீங்கள் இலவச வீட்டு மனைப்பட்டா கேட்டுள்ளீர்கள். இப்போது நிலம் இல்லை என கூறப்பட்டு உள்ளது.  பொதுமக்களின் வசதிக்காக பொது வாக்கு சாவடி அமைத்து தாருங்கள் என்று கோரிக்கை மனு அளித்தவருக்கு, வீட்டுமனை பட்டா கேட்டதாக பதிலளித்து, நிலம் இல்லை என கூறி அவரது மனுவையும் நிராகரித்து உள்ளது அதிருப்திைய ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து மோகன் கூறுகையில், முதல்வரின் உத்தரவின்படி சிறப்பு குறைதீர்ப்பு முகாம் நடந்ததால் அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுப்பார்கள் என்ற நம்பிக்கையில், நானும் அன்றைய தினம் வேலைக்கு செல்லாமல் அதிகாரிகளை சந்தித்து மனு அளித்தேன். ஆனால் நான் அளித்த மனுவை சரியாக படித்து கூட பார்க்காமல், வாக்குசாவடி அமைத்து தாருங்கள் என்று கேட்டதற்கு, வீட்டுமனைப்பட்டா இல்லை என்று பதில் தந்துள்ளனர். எனவே அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

உதாசீனப்படுத்தும் அதிகாரிகள்

முதல்வரின் உத்தரவின்படி நடந்த ஒரு குறை தீர்ப்பு முகாமிலேயே அதிகாரிகள் இவ்வளவு அலட்சியமாக இருந்தார்கள் என்றால், சாதாரண நாட்களில் பெறும் மனுக்களை எப்படி உதாசீனப்படுத்துவார்கள் என்பதற்கு இதுவே ஒரு உதாரணம்  இவ்வாறு தவறுதலாக பதிலளித்த அதிகாரிகள் மீது மாவட்ட கலெக்டர் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Related Stories: