கோயில் இடத்தில் இயங்கும் கடை, அலுவலகத்திற்கு வாடகையை உயர்த்த வேண்டும் இந்து மக்கள் கட்சியின் அகில பாரத அனுமன் சேனா அமைப்பு கோரிக்கை

காரைக்கால், அக்.17: காரைக்கால் மாவட்டத்தில் கோயில் இடத்தில் இயங்கும் கடை, அலுவலங்களுக்கு இன்றைய சந்தை நிலவரப்படி வாடகையை உயர்த்த வேண்டும் என, இந்து மக்கள் கட்சியின் அகில பாரத அனுமன் சேனா அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

இந்து மக்கள் கட்சியின் அகில பாரத அனுமன் சேனா அமைப்பின் நிர்வாகக்குழு கூட்டம் காரைக்காலில் நடைபெற்றது. கூட்டத்திற்கு, இந்து மக்கள் கட்சி மாவட்ட தலைவர் கணேஷ் தலைமை வகித்தார். தேசிய தலைவர் தரன், தேசிய துணைத் தலைவர் லோகேஷ், தமிழக மாநில தலைவர் கோவிந்தராஜ், புதுச்சேரி மாநில தலைவர் மஞ்சினி மற்றும் அருண்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.தொடர்ந்து, தேசிய தலைவர் தரன் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:காரைக்கால் மாவட்டத்தில் பல்வேறு கோயில்களுக்கு சொந்தமான இடங்களில், கடந்த பல ஆண்டுகளாக இயங்கி வரும் கடை, அலுவலகம், வணிக நிறுவனங்களுக்கு, கடந்த 40 ஆண்டுகளாக வாடகை உயர்த்தப்படவில்லை. குறிப்பிட்டு சொல்லவேண்டு மென்றால், ரூ.20 ஆயிரம் வாடகை வாங்க வேண்டிய இடத்திற்கு வெறும் ரூ.2000 வாங்கப்பட்டு வருவது வேதனையானது. இதனால், பல கோவில்கள் வருவாய் இன்றி உள்ளது. மேலும் பல கோவில் இடங்கள் அரசியல்வாதிகளால் ஆக்கிரமிப்பில் உள்ளது.

இது குறித்து மாவட்ட கலெக்டர் உரிய ஆய்வு மேற்கொண்டு, இன்றைய சந்தை நிலவர அடிப்படையில் வாடகை நிர்ணயம் செய்து கோவில் வருமானத்தை பெருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு செய்யாவிட்டால் அனுமன் சேனா அமைப்பு சார்பில் ஆக்கிரமிப்பு மீட்புக் குழு அமைக்கப்பட்டு இடத்தை மீட்டு அரசிடம் ஒப்படைக்கும் பணி மேற்கொள்ளப்படும்.மேலும், காரைக்காலில் நலவழித்துறை, அரசு போக்குவரத்துறை, நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்கள், அங்கன்வாடி மற்றும் பிற அரசுத்துறை ஊழியர்களின் நிலுவை ஊதியத்தை, பண்டிகை காலத்தை கருத்தில் கொண்டு உடனே வழங்க புதுச்சேரி அரசு முன்வர வேண்டும். மாவட்டம் முழுவதும் குண்டும் குழியுமாக உள்ள அனைத்து சாலைகளையும் உடனே சீர்செய்ய வேண்டும். அரசு பொதுமருத்துவமனையின் தரத்தை உயர்த்த வேண்டும் என்றார்.

Related Stories: