போதிய அளவு தண்ணீரை கொண்டு குறைந்த நாளில் அதிக லாபம் தரும் வெண்டை சாகுபடி

வேதாரண்யம், அக்.17: போதிய அளவு தண்ணீரை கொண்டு குறைந்த நாளில் அதிக லாபம் தரும் வெண்டை சாகுபடியில் வேதாரண்யம் விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா புஷ்பவனம், பெரியகுத்தகை, நாலுவேதபதி, கத்தரிப்புலம், தேத்தாகுடி, செம்போடை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வெண்டை சாகுபடி நடைபெறுகிறது. குறைந்த அளவு தண்ணீரை கொண்டு குறைந்த நாட்களில் அதிக லாபம் தரும் வெண்டை சாகுபடியை விவசாயிகள் ஆர்வமுடன் மேற்கொண்டு வருகின்றனர். குறைந்த செலவில் வெண்டை சாகுபடியில் அதிக லாபம் கிடைக்கிறது.ஒரு கிலோ வெண்டை விவசாயிகளிடமிருந்து ரூ.20க்கு கொள்முதல் செய்யப்பட்டு வேதாரண்யம் அருகே உள்ள திருத்துறைப்பூண்டி, திருவாரூர், நாகை அருகே உள்ள பரவை சந்தைக்கு நாள்தோறும் கொண்டு செல்லப்படுகிறது. குறைந்த நேர உழைப்பில் அதிக லாபம் தரும் இந்த வெண்டை சாகுபடியை பெரும்பாலான விவசாயிகள் மேற்கொண்டு வருகின்றனர்.வேதாரண்யம் தாலுகா தேத்தாகுடியில் பழனியப்பன் என்ற விவசாயி ஒருங்கிணைந்த பண்னை திட்டத்தின் கீழ் வெண்டை, கத்தரி, பூசணி, சுண்டைக்காய், புடலை, கடலை, வௌ்ளரிக்காய், பரங்கி உள்ளிட்ட பல்வேறு சாகுபடிகளை செய்து வருகிறார். தற்போது அரை ஏக்கரில் வெண்டை சாகுபடி சுமார் 15 ஆயிரம் செலவில் செய்துள்ளார்.

இதன் மூலம் மூன்று மாதத்தில் ரூ.25 ஆயிரம் லாபம் கிடைக்கும் எனவும் தெரிவித்தார். 10 ஆண்டுகளாக பல்வேறு சாகுபடிகளை செய்து வரும் விவசாயி பழனியப்பன், ரசாயண உரங்களையே பயன்படுத்தி வருகிறார். தனது பண்னை சாகுபடி திட்டத்திற்கு விவசாய துறை அதிகாரிகளிடமிருந்து எந்தவித ஒத்துழைப்பும் இல்லை என கூறுகிறார். தனக்கு இயற்கை உரங்களை பயன்படுத்தி விவசாயம் செய்ய ஆர்வம் உள்ளதாகவும், அதற்கு விவசாய துறையினர் தகுந்த ஆலோசனை வழங்க வேண்டும். என்னை போல் வேதாரண்யம் தாலுகாவில் நூற்றுக்கணக்கான விவசாயிகள் காய்கறிகளை பல்வேறு சந்தைகளுக்கு கொண்டு சென்று நேரடியாக விற்பனை செய்வதன் மூலம் இடைத்தரகர்கள் இன்றி கூடுதலாக லாபம் கிடைக்கிறது என்று தெரிவித்தார்.

Related Stories: