குடிமை பொருள் வழங்கல் துறையை பாப்ஸ்கோ ஊழியர்கள் முற்றுகை

புதுச்சேரி, அக். 17:      புதுச்சேரியில் நிலுவை சம்பளத்தை வழங்காததால் ஆத்திரமடைந்த  பாப்ஸ்கோ ஊழியர்கள் குடிமை பொருள் வழங்கல் துறையை மீண்டும் நேற்று  முற்றுகையிட்டனர். அப்போது 2 ஊழியர்கள் பெட்ரோலை ஊற்றி தீக்குளிக்க  முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.  புதுவை பாப்ஸ்கோவில் பணியாற்றும்  ஊழியர்களுக்கு 3 வருடமாக சம்பளம் வழங்கப்படாத நிலையில் கடந்த பட்ஜெட்டில்  அரசு ஒதுக்கிய நிதியிலிருந்து ஊதியம் வழங்க வலியுறுத்தி வருகின்றனர். ஆனால்  ஏற்கனவே வழங்கப்பட்ட அரிசி நிலுவைக்கான தொகையை செலுத்த நிர்வாகம்  நடவடிக்கை மேற்கொண்ட நிலையில், இதை கண்டித்து 2 முறை குடிமை பொருள் வழங்கல்  துறை அலுவலகத்தை ஊழியர்கள் முற்றுகையிட்டனர். பின்னர் இயக்குனர்  வல்லவனை சந்தித்து முறையிட்ட நிலையில், நீதிமன்ற உத்தரவின்படி அரிசிக்கான  நிலுவையை செலுத்திவிட்டு மீதமுள்ள தொகையில் இருந்து சம்பளம் வழங்க அரசு  உத்தரவிட்டால் பரிசீலிப்பதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் இதுவரை பாப்ஸ்கோ  ஊழியர்களுக்கு ஊதியம் எதுவும் வழங்கப்படவில்லை.

  இதனால் ஆத்திரமடைந்த  பாப்ஸ்கோ ஊழியர்கள் 100க்கும் மேற்பட்டோர் நேற்று தட்டாஞ்சாவடியில் உள்ள  குடிமை பொருள் வழங்கல் துறை அலுவலகத்தை ஒருங்கிணைப்பாளர் கோவர்த்தனன்  தலைமையில் மீண்டும் முற்றுகையிட்டனர். அப்போது தட்டாஞ்சாவடி குருநாதன்,  திருபுவனை ராஜசேகர் ஆகியோர் தாங்கள் மறைத்து கொண்டு வந்த பெட்ரோலை திடீரென  ஊற்றி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து  அங்கிருந்து ஊழியர்கள் இருவரையும் சமாதானப்படுத்தி தடுத்து நிறுத்தினர்.  அதன்பிறகு அனைவரும் அங்கேயே காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.  இதையடுத்து விரைந்து வந்த கோரிமேடு போலீசார் முற்றுகையில் ஈடுபட்ட 54  பெண்கள் உள்பட 114 பேரை உடனே கைது செய்து அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.  

Related Stories: