மதிப்பு கூட்டப்பட்ட கல்வியே தற்போதைய தேவை

ஊட்டி, அக். 16: ‘‘மதிப்பு கூட்டப்பட்ட கல்வியே தேவை,’’ என இலங்கை பிரதமர் ரனில் விக்கிரமசிங்கேவின் மனைவியும், கல்வியாளருமான மைத்ரி விக்கிரமசிங்கே கேட்டுக் கொண்டார். ஊட்டி அருகேயுள்ள முத்தோரை பாலாடாவில் உள்ள குட்ஷெப்பர்டு சர்வதேச பள்ளியின் 43வது ஆண்டு நிறுவனர் தின விழா நேற்று நடந்தது. இதில், சிறப்பு விருந்தினராக பங்கேற்ற மைத்ரி விக்கிரமசிங்கே பேசியதாவது: சர்வதேசஅளவில் கல்வித்துறையில் தற்போது பல்வேறு மாற்றங்கள் வந்த வண்ணம் உள்ளன. இந்தியாவில் தொடக்க காலத்தில் குருகுல கல்வி முறை இருந்தது.

அதன் பின் போர்க்களத்தை எதிர்கொள்ளும் வகையில் ராணுவப் பயிற்சி அடிப்படையிலான கல்வி முறை நடைமுறைக்கு வந்தது. தொடர்ந்து பல்வேறு மாற்றங்களுக்கு பின் மேற்கத்திய கல்வி முறை நடைமுறைக்கு கொஞ்சம் கொஞ்சமாக வந்து விட்டது. தற்போது கணிணி அடிப்படையிலான  பல்வேறு கல்வி  முறைகளும் நடைமுறைக்கு வந்து விட்டது. ஆனால், தற்போதுள்ள சூழலில் நமது வாழ்க்கை முன்னேற்றத்திற்கும், பிரச்னைகளை தீர்ப்பதற்கு வழி காணும் வகையிலான கல்வி முறையே அவசியமாகும். கிழக்கு மற்றும் மேற்கத்திய நாடுகளின் திணிக்கப்படும் கல்வி முறைக்கு இந்தியா அடி பணிந்து விடக்கூடாது.

நமது பாரம்பரிய கல்வி முறையை விட்டுக் கொடுத்து விடக்கூடாது.

நமது கல்வி முறையில் சரித்திரத்தையும், பூகோளத்தையும் மட்டும் படிப்பதால் மட்டும் சாதித்து விட முடியாது. அதையும் தாண்டி மதிப்பு கூட்டப்பட்ட கல்வி முறையே அவசியமாகும்.பயங்கரவாதம்,  இனவாதம், வகுப்பு வாதம் போன்ற பல்வேறு பிரச்னைகளுக்கு தீர்வு காணக்கூடிய வகையிலும் நமது கல்வி முறை அமைய வேண்டும். இதை பள்ளிகளிலிருந்து தொடங்கி பல்கலைக்கழக அளவில் பெரிதாக்க வேண்டும். அதற்கேற்ப பல்கலைக் கழகங்களில் முக்கிய பாடங்களாக கொண்டு வர வேண்டும். இத்தகைய கல்வி முறையே தற்போது இங்கிலாந்து, ஜப்பான், ஸ்வீடன், பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளில் கற்றுத் தரப்படுகிறது. அதைப்போன்ற கல்வியே தமது தற்காலத் தேவையாகும். வழக்கமான கல்வி முறையிலிருந்து மாறுபட்டு எதிர்காலத்தை தீர்க்கமாகவும், உறுதியாகவும் எதிர்கொள்ளக்கூடிய கல்வி முறையே கொண்டு வர வேண்டும்.இவ்வாறு  மைத்ரி விக்கிரமசிங்கே பேசினார்.முன்னதாக, பள்ளியின் நிர்வாகக்குழு உறுப்பினரும், தமிழக அரசின் முன்னாள் தலைமைச் செயலருமான ஸ்ரீபதி வரவேற்றார். நிகழ்ச்சியில் பள்ளியின் தாளாளர் தாமஸ், துணைத்தலைவர் எல்சம்மா தாமஸ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். நிறுவனர் தினத்தையொட்டி பள்ளி மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

Related Stories: