111வது மலை ரயில் தினம் கேக் வெட்டி கொண்டாட்டம்

ஊட்டி, அக்.16: ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கடந்த 1899ம் ஆண்டு ஜூன் மாதம் 15ம் தேதி முதல் மேட்டுபாளையம் - குன்னூர் இடைேய மலை ரயில் இயக்கப்பட்டது. அதன் பின் 9 ஆண்டுகள் கழித்து குன்னூரில் இருந்து ஊட்டி அருகேயுள்ள பெர்ன்ஹில் வரை இயக்கப்பட்டது. ஊட்டியில் ரயில் நிலையம் அமைக்கப்பட்டு 1909ம் ஆண்டு அக்டோபர் 15ம் தேதி ஊட்டி நகரம் வரை மலை ரயில் சேவை நீட்டிக்கப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 15ம் தேதி என்.எம்.ஆர்., என அழைக்கப்படும் நீலகிரி மலை ரயில் நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது.  

மலைரயில் ரத அறக்கட்டளை சார்பில் 111வது நீலகிரி மலை ரயில் தின விழா நேற்று ஊட்டி ரயில் நிலையத்தில் நடந்தது. நிகழ்ச்சிக்கு, மலைரயில் ரத அறக்கட்டளை நிறுவன தலைவர் நடராஜன் தலைமை வகித்தார். கேக் வெட்டப்பட்டு சுற்றுலா பயணிகளுக்கு வழங்கப்பட்டது. பின்னர் தூய்மையான ரயில் நிலையத்திற்கான கேடயம் வழங்கப்பட்டது. முன்னதாக மேட்டுபாளையத்தில் இருந்து ஊட்டிக்கு மலைரயிலில் வந்த சுற்றுலா பயணிகளுக்கு மலர்கள் கொடுத்தும், இனிப்புகள் வழங்கியும் வரவேற்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், ரயில் நிலைய கண்காணிப்பாளர் ரமேஷ், உதவி சுற்றுலா அலுவலர் துர்காதேவி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Related Stories: