பெரம்பலூர் பகுதியில் பலத்த மழை வாலிபரை தாக்கியவருக்கு 10 மாத சிறை தண்டனை

பெரம்பலூர், அக். 16: வாலிபரை தாக்கிய கடலூர் மாவட்ட பிரமுகருக்கு வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் 10 மாத சிறை தண்டனை விதித்து பெரம்பலூர் மாவட்ட வன் கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள ரெட்டிக்குடிகாடு கிராமத்தை சேர்ந்தவர் அண்ணாதுரை மகன் ஆனந்தபாபு (28). அண்ணாதுரை இறந்து விட்ட நிலையில் ஆனந்தபாபு தனது தாய் அஞ்சலம் மற்றும் மனைவி ஆனந்தியுடன் வசித்து வந்தார். கடந்தாண்டு டிசம்பர் 25ம் தேதியன்று இரவு 10 மணிக்கு அகரம்சீகூர் பார்டர் வரை சென்று வருவதாக கூறி ஆனந்தபாபு பைக்கில் சென்றார். இரவு 11 மணி வரை திரும்பி வராததால் சந்தேகமடைந்த தாய் அஞ்சலம், உறவினரான வீரமணி என்பவருடன் அகரம்சீகூர் சென்று பார்த்தபோது அங்குள்ள ஹோட்டல் முன் ஆனந்தபாபுவை கடலூர் மாவட்டம் திட்டக்குடியை சேர்ந்த சரவணன் மகன் சுபாஷ் என்பவர் அடித்து உதைத்து கொண்டிருந்தார்.

இதில் படுகாயமடைந்ததால் ஆனந்தபாபுவை திட்டக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கும், அதன்பின்னர் சென்னையில் உள்ள அரசு மருத்துவமனையிலும் சேர்த்தனர். ஜாதி பிரச்னை சம்மந்தமாக தாக்குதல் நடந்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்துஆனந்தபாபுவின் தாய் அஞ்சலம் கொடுத்த புகாரின்பேரில் அப்போதைய மங்களமேடு சப்.இன்ஸ்பெக்டர் மணிகண்டன், வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் வழக்குப்பதிந்து சுபாஷை கைது செய்தார். பிறகு சுபாஷ் ஜாமீனில் வெளியே வந்துவிட்டார்.இந்நிலையில் இந்த வழக்கு பெரம்பலூர் மாவட்ட வன்கொடுமை தடுப்பு சட்ட சிறப்பு நீதிமன்றம் மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. அரசு தரப்பில் அரசு சிறப்பு வழக்கறிஞர் கதிர் கனகராஜ் ஆஜராகி வந்தார். இந்நிலையில் நேற்று வழக்கு விசாரணை நடந்தது. அதில் சுபாஷிற்கு இந்திய தண்டனை சட்டம் எஸ்சி, எஸ்டி ஆக்ட், வன்கொடுமை தடுப்பு சட்டம் டி3(1)ன் கீழ் 10 மாத சிறை தண்டனையையும், இந்திய தண்டனை சட்டம் பிரிவு 323ன்படி 6 மாத சிறை தண்டனையும் விதித்து, அவற்றை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டுமென நீதிபதி (பொ) மலர்விழி தீர்ப்பளித்தார்.

Related Stories: