நீதிமன்ற உத்தரவின் பேரில் போலீஸ் பாதுகாப்புடன் சுற்றுச்சுவர் அமைப்பு

பள்ளிபாளையம், அக்.16: தனியார் நிலத்தில் சுற்றுச்சுவர் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இதனால் உயர்நீதி மன்ற உத்தரவின்படி போலீஸ் பாதுகாப்போடு சுற்றுசுவர் அமைக்கப்பட்டது. பள்ளிபாளையம் ஒன்றியம் ரங்கனூரில் அருந்ததியர் சமூகத்தினர் 70 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்குள்ள அரசு உயர்நிலைப்பள்ளிக்கு இச்சமூகத்தை சேர்ந்த மாணவ, மாணவிகள் தனியார் நிலத்தின் வழியாக சென்று வந்தனர். இந்நிலத்திற்கு உரிமையாளர் திரிபுரசுந்தரி சுகுமாரன், விவசாய பணிக்கு பாதுகாப்பு செய்ய சுற்றுசுவர் அமைக்க முயன்றார். இதனால் மாற்று பாதையில் பள்ளிக்கு சென்றுவர தாமதமாகும் என்பதால் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள், தாங்கள் வழக்கமாக சென்று வரும் பாதையை மறித்து சுவர் அமைக்க எதிர்ப்பு தெரிவித்தனர். இது தொடர்பாக நிலத்தின் உரிமையாளருக்கும், அப்பகுதியை சேர்ந்த மக்களுக்கும் சமீப காலமாக பிரச்னை இருந்து வந்தது.

 இந்நிலையில் நிலத்தின் உரிமையாளர் திரிபுரசுந்தரி, சென்னை உயர்நீதி மன்றத்தில் சுற்றுசுவர் அமைத்துக் கொள்ள போலீஸ் பாதுகாப்பு கேட்டு உத்தரவு பெற்றார். இதன்படி நேற்று நிலத்தின் உரிமையாளர் பள்ளிபாளையம் போலீசார் பாதுகாப்புடன் நிலத்தின் வழியாக செல்லும் வழித்தடத்தை மறித்து சுவர் எழுப்ப முயன்றார்.இதை அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் எதிர்த்தனர். ஆனால் நிலத்தின் உரிமையாளர் தனது நிலத்தில் விவசாய பணிகளை மேற்கொள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து கொள்ள உயர்நீதிமன்றத்தில் உத்தரவு பெற்றுள்ளதால், நீதி மன்ற உத்தரவில் தலையிட முடியாதென போலீசார் மறுப்பு தெரிவித்தனர்.இதையடுத்து அங்குள்ள கிராம மக்கள் எலந்தகுட்டை கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். குமாரபாளையம் தாசில்தார் தங்கம், சம்பவ இடத்திற்கு விரைந்து பொதுமக்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். நீதி மன்ற உத்தரவில் அதிகாரிகள் தலையிட முடியாதென தாசில்தார் தெரிவித்தார். மேலும், ஒரு குழுவை அமைத்து நிலத்தின் உரிமையாளரிடம் பேச்சுவார்த்தை நடத்தி முடிவு செய்து கொள்ள வேண்டும் என்றார்.  நிலத்தின் உரிமையாளரிடமும் பேசிய தாசில்தார் பொதுமக்களின் பிரச்னையை தீர்க்க அவர்களுடன் பேசி தீர்வுகாணும்படி கேட்டுக்கொண்டார்.

Related Stories: