சேலம்-நாமக்கல்-கரூர் பாசஞ்சர் ரயில் நிரந்தர சேவை துவக்கம்

சேலம், அக்.16: சேலம்-நாமக்கல்-கரூர் இடையே 85 கிலோ மீட்டர் தூரத்திற்கு புதிதாக அகல ரயில்பாதை அமைக்கப்பட்டது. இந்த புதிய வழித்தடத்தில் சேலம்-கரூர் பாசஞ்சர் ரயில் (இரு மார்க்கத்தில் 4 சேவை), இயக்கப்பட்டு வருகிறது. இதுபோக திருச்சி-கரூர் பாசஞ்சர் ரயில், கடந்த 7 மாதத்திற்கு முன் சேலம் வரை நீட்டிக்கப்பட்டு, கரூர்-சேலம் சிறப்பு பாசஞ்சர் ரயிலாக இயக்கப்பட்டு வந்தது. இந்த சிறப்பு பாசஞ்சர் ரயிலை வாரத்திற்கு 6 நாட்கள் (ஞாயிறு தவிர) நிரந்தர ரயிலாக இயக்க மத்திய ரயில்வே அமைச்சகம் அனுமதி அளித்தது. இதேபோல், சேலம் கோட்ட பகுதியில் கோவை-பழனி-கோவை பாசஞ்சர் (56609, 56608),  பொள்ளாச்சி-கோவை-பொள்ளாச்சி பாசஞ்சர் (56184, 56183) ரயில்களையும், பிற மாநிலங்களில் 7 ரயில்களையும் என மொத்தம் 10 சேவா சேவை ரயில்களை நிரந்தர ரயில்களாக அறிவித்தது. இந்த 10 ரயில்களின் நிரந்தர சேவை தொடக்க விழா நேற்று டெல்லியில் நடந்தது. சேலம், கோவை உள்ளிட்ட 9 இடங்களில் வீடியோ கான்பரன்சிங் மூலம் விழா நடத்தப்பட்டது.

சேலம் ரயில்வே ஸ்டேஷனில் நடந்த விழாவுக்கு கோட்ட மேலாளர் சுப்பாராவ் தலைமை வகித்தார். முதுநிலை வணிக மேலாளர் ஹரிகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். சேலம் திமுக எம்பி எஸ்.ஆர்.பார்த்திபன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். டெல்லியில் இருந்தபடி மத்திய ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயல், சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன், பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திரபிரதான், ரயில்வே இணை அமைச்சர் சுரேஷ் சி அங்கடி ஆகியோர் ரயில்களின் இயக்கத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தனர். இதையடுத்து சேலம் ரயில்வே ஸ்டேஷனின் முதல் பிளாட்பார்ம்மில் இருந்து சேலம்-கரூர் பாசஞ்சர்  (76801, 76802) ரயிலை எம்பி பார்த்திபன், கோட்ட மேலாளர் சுப்பாராவ், ரயில் பயணிகள் நல ஆலோசனை குழு உறுப்பினர் கோபிநாத் உள்ளிட்டோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். இந்த ரயில் இன்று முதல் கரூரில் காலை 11.40 மணிக்கு புறப்பட்டு, சேலத்திற்கு மதியம் 1.25 மணிக்கு வந்து சேரும். மறுமார்க்கத்தில் சேலத்தில் மதியம் 1.40 மணிக்கு புறப்பட்டு, நாமக்கல் வழியே கரூருக்கு பிற்பகல் 3.25 மணிக்கு சென்றடையும். வழியில், மல்லூர், ராசிபுரம், புதுச்சத்திரம், களங்காணி, நாமக்கல், மோகனூர், வாங்கல் ஸ்டேஷன்களில் நின்றுச் செல்லும். இந்த ரயில் கரூர் சென்றதும், திருச்சிக்கு இயக்கப்படுகிறது.

Related Stories: