விஸ்வேஸ்வரய்யா டவர் பூங்கா நிலத்தில் இருந்து அண்ணாநகர் டவர்ஸ் கிளப்பை வெளியேற்ற ஐகோர்ட் உத்தரவு

சென்னை: அண்ணாநகரில் 55,000 சதுர அடியில் விஸ்வேஸ்வரய்யா டவர் பூங்கா அமைக்கப்பட்டது.  இங்கு அண்ணாநகர் டவர்ஸ் கிளப்  சங்கம், 1989ம் ஆண்டு சென்னை மாநகராட்சியை அணுகி, மனமகிழ்மன்றம் தொடங்க நிலம் கேட்டது.இதை ஏற்ற மாநகராட்சி, விஸ்வேஸ்வரய்யா டவர் பூங்காவில் உள்ள 5,872 சதுர அடி நிலத்தை 3 ஆண்டு குத்தகைக்கு அண்ணாநகர் டவர்ஸ் கிளப் நிர்வாகத்துக்கு வழங்கியது. இதில் கலையரங்கம் கட்டிய கிளப் நிர்வாகம், அருகில் உள்ள சுமார் 31,992 சதுர அடி பூங்கா நிலத்தையும் சட்டவிரோதமாக எடுத்துக் கொண்டது. குத்தகை முடிந்த நிலையில் 2012-ம் ஆண்டு நிலத்தை திருப்பி  ஒப்படைக்குமாறு மாநகராட்சி  நோட்டீஸ் அளித்தது. இதை எதிர்த்து  சென்னை மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் அண்ணாநகர் டவர்ஸ் கிளப் செயலாளர் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் செயலாளர் மேல்முறையீடு செய்தார்.

இதை நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் விசாரித்தார். சென்னை மாநகராட்சி சார்பில் வக்கீல் டி.சி.கோபாலகிருஷ்ணன் ஆஜரானார். நீதிபதி பிறப்பித்த உத்தரவு வருமாறு: வெறும் 5,872 சதுர அடி நிலம் குத்தகைக்கு எடுத்து, அருகில் உள்ள நிலத்தை எல்லாம் கிளப் நிர்வாகம் ஆக்கிரமித்து, அனுமதியின்றி கட்டிடங்களை கட்டியும், விளையாட்டு மைதானங்களை அமைத்தும் அனுபவித்து வந்துள்ளது. இந்த நிலம் மீது கிளப் நிர்வாகம் உரிமை கோர முடியாது. அண்ணாநகர் டவர்ஸ் கிளப்பில் ஓய்வுப்பெற்ற நீதிபதிகள், ஓய்வு பெற்ற மற்றும் பணியில் உள்ள ஐஏஎஸ், ஐபிஎஸ்.அதிகாரிகள் உறுப்பினர்களாக உள்ளனர். இவர்கள்,  அனைத்து சட்டங்களையும் மீறி செயல்பட்டது மனவேதனை அளிக்கிறது. எனவே, மாநகராட்சி நோட்டீசை எதிர்த்து கிளப் நிர்வாகம் செய்த மேல்முறையீட்டைதள்ளுபடி செய்கிறேன். பூங்கா நிலத்தில் இருந்து அண்ணாநகர் டவர் கிளப்பை வெளியேற்ற வேண்டும். சட்டவிரோத கட்டிடங்களை இடித்து தள்ளவேண்டும் என உத்தரவிட்டார்.

Related Stories: