சென்னை - திருச்சி நெடுஞ்சாலையில் நிழற்குடை இல்லாத மதுராந்தகம் ஏரிக்கரை பஸ் நிறுத்தம்

மதுராந்தகம், அக்.16: மதுராந்தகம் புறவழிச்சாலை ஏரிக்கரை பஸ் நிறுத்தத்தில், திருச்சி - சென்னை மார்க்கத்தில் நிழற்குடை இல்லாததால், வெயில் மற்றும் மழையில் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். இதனால், அங்கு நிழற்குடை அமைக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மதுராந்தகம் நகரம், முழுவதும் கிராமங்கள் சூழ்ந்துள்ளன. இங்குள்ள கிராம மக்கள் அரசு மற்றும் தனியார் அலுவலகத்துக்கும், வீட்டில் நடைபெறும் சுப நிகழ்ச்சிகள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் என பல்வேறு தரப்பினரும் தங்களுக்கு தேவைகளுக்காக மதுராந்தகம் நகருக்கு செல்கின்றனர். அங்கிருந்து பஸ் பிடித்து சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், திருச்சி, சேலம், தஞ்சாவூர், திருநெல்வேலி என தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.

வெளியூர் செல்லும் மக்கள், மதுராந்தகம் புறவழிச்சாலையான சென்னை  திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மதுராந்தகம் ஏரிக்கரை பஸ் நிறுத்தில் இருந்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பஸ் மூலம் வேண்டியுள்ளது.ஆனால், பல ஆண்டுகளாக திருச்சி - சென்னை மார்க்க பஸ் நிறுத்தத்தில் பயணிகளுக்கு பஸ் நிழற்குடை இல்லாமல் உள்ளது. இதனால், வெயில் காலத்தில் காய்ந்தும், மழைக்காலத்தில் நனைந்தும் மக்கள் கடும் அவதியடைகின்றனர். இதில் பெண்கள், குழந்தைகள், முதியோர் மாணவ, மாணவிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் மழை மற்றும் கடும் வெயில் நேரங்களில் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். குறிப்பாக திடீரென மழை வரும்போது, இந்த சாலை, வாகன நெரிசலுடன் காணப்படும். அந்த நேரத்தில், இந்த புறவழிச் சாலையை திடீரென கடந்து வேறு எங்கும் சென்று ஒதுங்க முடியாது. அப்படி செல்லும் மக்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.

இதையொட்டி, அவர்கள் மழையில் நனைந்தபடியே அங்கு நின்று பஸ் பிடிக்க வேண்டிய சூழல் உள்ளது. இதனால், பலரும் மழையில் நனைந்து உடல்நலம் பாதிக்கப்படும் நிலை ஏற்படுகிறது. மேற்கண்ட பகுதியில் உள்ள கிராம மக்கள் பலரும், மருத்துவ மேல் சிகிச்சைக்கு சென்னையை நோக்கி செல்கின்றனர். அவர்களும் இந்த வெட்ட வெளியில் பஸ் பிடிக்க நின்று மழை, வெயிலால் பாதிக்கப்படுகின்றனர். இதுபோன்ற நிலை தவிக்க இங்கு இருக்கை வசதியுடன் கூடிய பஸ் பயணிகள் நிழற்குடை அமைக்க வேண்டும் என பல ஆண்டுகளாக சமூக ஆர்வலர்கள் தமிழக அரசு, போக்குவரத்து, நெடுஞ்சாலைத் துறையினருக்கு கோரிக்கை வைத்து வருகின்றனர். ஆனால், இதுவரை எவ்வித நடவடிக்கையும் இல்லை என பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். எனவே, மிக விரைவில், இங்கு பஸ் பயணிகள் நிழற்குடை அமைக்க வேண்டும். இல்லாவிட்டால், மதுராந்தகம் நகரில் பொதுமக்களை திரட்டி போராட்டத்தில் ஈடுபடுவோம் எனவும் சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

Related Stories: