புதுக்கோட்டை மாவட்டத்தில் கனமழை

புதுக்கோட்டை, அக்.16: புபுதுக்கோட்டை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று காலை முதல் புதுக்கோட்டை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இந்த மழையால் சாலையில் மழைநீர் ஆறுபோல் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் தாழ்வான பகுதிகளாக பழைய பஸ் நிலையம், தற்காலிக பஸ் நிலையம், திலகர் திடல், பொது அலுவலக வளாகம் உள்ளிட்ட தாழ்வான பகுதிகளில் மழைநீர் குளம்போல் தேங்கி உள்ளது. மேலும் புதுக்கோட்டை நகரில் அவ்வப்போது சிறிது சிறிது நேரமாக விட்டு விட்டு மழை பெய்து கொண்டிருப்பதால், பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர். பொன்னமராவதி: பொன்னமராவதி மேலச்சிவபுரி, பொன்னையூர் உள்ளிட்ட பகுதியில் நேற்று காலை முதல் மாலைவரை சாரல் மழை பெய்தது.

இதனால் சம்பா விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். மழை தொடர்ந்து பெய்ததால் பொதுமக்களின் இயல்புவாழ்க்கை பாதிக்கப்பட்டது.  கறம்பக்குடி: கறம்பக்குடி தாலுகாவில் அம்புகோவில், பிளாவிடுதி, அம்மாணிப்பட்டி, மைலன்கோன்விடுதி உள்ளிட்ட பகுதியில் கனமழை விட்டு விட்டு பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. இந்த மழையால் பள்ளி மாணவர்கள், மற்றும் பொதுமக்கள் கடும் இன்னல்களுக்கு ஆளாகினர். மழை அளவு: புதுக்கோட்டை மாவட்டத்தில் பெய்த மழையளவு மி.மீட்டரில் வருமாறு: அறந்தாங்கி 1.40, மீமிசல் 7.40, மணமேல்குடி 21 பதிவானது.

Related Stories: