தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணி நதி தூய்மை பணி அக்.17ல் துவக்கம்

தூத்துக்குடி, அக். 16: தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணி நதியை தூய்மைப்படுத்தும் பணி வரும் 17ம் தேதி துவங்க உள்ளதாக கலெக்டர் சந்தீப்நந்தூரி தெரிவித்தார். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘‘தூத்துக்குடி மாவட்டத்தில் நீர் நிலைகளை தூர்வாரும் பணிகள் முடிவடையும் நிலையை எட்டியுள்ளது. மாவட்டத்தில் மொத்தம் 36 குளங்களில் குடிமராமத்து பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் 28 குளங்களில் 100 சதவீதம் பணிகள் முடிவடைந்துள்ளன. மற்ற குளங்களில் 60 முதல் 70 சதவீத பணிகள் முடிந்துள்ளன.இதேபோல் 87 சிறுபாசன குளங்கள், 473 ஊரணிகள், குட்டைகளில் 85 சதவீதம் பணிகள் முடிவடைந்துள்ளன. மீதமுள்ள பணிகள் அனைத்தும் இந்த வாரத்துக்குள் முடிவடையும். மழை காரணமாக சில குளங்களில் தண்ணீர் தேங்கியுள்ளதால் பணிகளில் தாமதம் ஏற்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் 60 கி.மீ. அளவிற்கு செல்லும் தாமிரபரணி ஆற்றை தூய்மைப்படுத்தும் மெகா தூய்மை பணி அக். 17, 18 ஆகிய தேதிகளில் நடைபெறும். அப்போது ஆற்றங்கரைகளில் உள்ள முட்செடிகள் இயந்திரங்களின் உதவியுடன் அகற்றப்படும்.

தொடர்ந்து 19, 20 ஆகிய தேதிகளில் மெகா தூய்மை பணி நடைபெறும். தாமிரபரணி ஆற்றில் 45 இடங்களில் இந்த பணி நடைபெறும். கல்லூரி மாணவர்கள், தன்னார்வலர்கள், விவசாயிகள், பொதுமக்கள் என 10 ஆயிரம் பேர் இந்த பணியில் ஈடுபடுகின்றனர். இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் நடைபெற்று வருகிறது. தூத்துக்குடி ஏற்கனவே மாசு நிறைந்த மாவட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, மாசை கட்டுப்படுத்த 3 ஆண்டுகளுக்கான விரிவான செயல்திட்டம் ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளது’’ என்றார். விஷவாயு வெளியேற வாய்ப்பில்லை: கலெக்டர் மேலும் கூறுகையில், ‘‘தூத்துக்குடி பகுதியில் வாயு கசிவு  இருப்பதாக பொதுமக்களிடம் இருந்து கடந்த சில நாட்களாக புகார்கள் வந்துள்ளன.  இதுகுறித்து ஆய்வு நடத்தி அறிக்கை சமர்ப்பிக்க மாவட்ட சுற்றுச்சூழல் நலப்  பொறியாளருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.அமோனியா வாயு கசிவு இருப்பதாகவே  மக்கள் மத்தியில் கூறப்படுகிறது. தூத்துக்குடி ஸ்பிக் உரத் தொழிற்சாலை  கடந்த 10 நாட்களாக ஆண்டு பராமரிப்பு பணிக்காக நிறுத்தப்பட்டுள்ளது. எனவே,  அந்த ஆலையில் இந்து அமோனியா வாயு வெளியேறியிருக்க வாய்ப்பு இல்லை.

எனவே, தூத்துக்குடி மாநகர பகுதிகளில் எந்தெந்த நிறுவனங்களில் அமோனியா  பயன்படுத்தப்படுகிறது என்பது குறித்து விரிவான ஆய்வு நடத்த  மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.தூத்துக்குடியில்  காற்று மாசை கண்டறிய மாநகராட்சி அலுவகம் அருகே, சிப்காட் வளாகம்,  திருச்செந்தூர் சாலை ஆகிய இடங்களில் கருவிகள் பொருத்தப்பட்டு  கண்காணிக்கப்பட்டு வருகிறது’’ என்றார்.

Related Stories: