பறவைகள் சரணாலயமான தேரூர் குளத்தை தூர்வார ஒதுக்கிய நிதி எங்கே? அதிகாரிகள் கைவிரித்ததால் களம் இறங்கிய இளைஞர்கள்

சுசீந்திரம், அக்.16 :  சுசீந்திரம் அருகே உள்ள தேரூர் குளம் பல நூறு ஏக்கர் பரப்பளவை கொண்டது. தேரூர், கருப்புகோட்டை, புதுக்கிராமம், தண்டநாயகன் கோணம், குறண்டி, கீழ தேரூர், மறுகால்தலை உள்பட பல்வேறு கிராமங்களை உள்ளடக்கியது. இந்த கிராமங்களை சேர்ந்த மக்களின் குடிநீர் உள்பட பல்வேறு தேவைகளை இந்த குளம் நிவர்த்தி செய்து வருகிறது. இது தவிர சுமார் 2500 ஏக்கருக்கும் அதிகமான விவசாய நிலமும் பாசன வசதி பெறுகிறது. இந்த குளத்தில் உள்ள தண்ணீர் மற்றும் சுற்றுச்சூழலுக்காக உள்ளூரில் உள்ள பறவைகள் மட்டுமல்லாமல் பல்வேறு நாடுகளில் இருந்தும் இங்கு ஏராளமான பறவைகள் வந்தன. ஆயிரக்கணக்கான மைல் தூரத்தில் இருக்கும் நாடுகளில் இருந்து கூட பறவைகள் இங்கு வந்து இனப்பெருக்கம் செய்து தங்கள் வாரிசுகளுடன் சொந்த நாட்டுக்கு திரும்பி செல்லும் நிகழ்வுகள் நடந்தன. இதனால் தேரூர் குளத்தை தமிழக அரசு பறவைகள் சரணாலயமாக அறிவித்தது. இதையடுத்து குளத்தை சுற்றிலும் வேலிகள் அமைக்கப்பட்டது. பொது மக்கள் பறவைகளை பார்க்க வசதியாக குளத்தின் கரையில் 2 காட்சி கோபுரங்களும் கட்டப்பட்டன. ஆனால் குளம் பொலிவை இழக்க ஆரம்பித்து விட்டது. ஆங்காங்கே ஆகாய தாமரை, செடி கொடிகள் அதிக அளவில் வளர தொடங்கி விட்டது.

தேரூர் பெரிய குளத்தை தூர்வாரி தூய்மைப்படுத்த வேண்டும் என்று பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் நீண்டகாலமாக கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து குளத்தை தூர்வார அரசு a68 லட்சம் நிதி ஒதுக்கியது. ஆனால் அந்த பணம் முறையாக பயன்படுத்தப்படவில்லை. அந்த நிதியில் மோசடி நடந்திருப்பதாக இந்த பகுதி மக்கள் கூறுகின்றனர். சம்பந்தப்பட்டவர்கள் மீது அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து குளத்தை தூய்மைப்படுத்த வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர். இருப்பினும் எந்த அதிகாரிகளும் கண்டுகொள்ளவில்லை. இதனால் மனம் உடைந்த தேரூர் பகுதி பொது மக்கள், விவசாயிகள், பல்வேறு அமைப்பினர் இணைந்து குளத்தை தூர்வார முடிவு செய்தனர். அதன்படி பொக்லைன் இயந்திரம் கொண்டு வந்து குப்பைகளையும், செடி கொடிகளையும் அகற்றினர்.

இது குறித்து பொது மக்கள் கூறியது: 20 வருடங்களுக்கு முன்பு இந்த குளம் தூய்மையான முறையில் இருந்தது. இந்த குளத்தின் தண்ணீரைத்தான் குடிநீராக மக்கள் பயன்படுத்தி வந்தனர். இப்போது ஊரில் உள்ள கழிவு நீரை குளத்தில் விடுகின்றனர். இது தவிர தாமரை, செடி கொடிகள் அதிக அளவில் வளர்ந்துள்ளது. இதனால் தான் குளத்து நீர் மாசுபட்டு உள்ளது. ஆகவே குடிநீருக்காக குளத்து நீரை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. செடி கொடிகள், மண் நிரம்பியுள்ளதால் நீர் பிடிப்பு பகுதியும் குறைந்து விட்டது. இதற்கிடையே சில மாதங்களுக்கு முன்பு குளத்தை தூர்வார தமிழக அரசு நிதி ஒதுக்கியது. அந்த நிதியை முறையாக பயன்படுத்தாமல் சில அதிகாரிகள் மோசடி செய்து விட்டனர். இதனால் அரசு நிதி ஒதுக்கிய பின்னரும் பொது மக்கள் தான் குளத்தை தூர்வார வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது. இந்த வேலை ஒரே நாளில் முடியாது என்பதால் ஞாயிற்றுக்கிழமை தோறும் குளத்தை தூய்மைப்படுத்துவது என்று முடிவு செய்துள்ளோம். இந்த குளத்தில் முழு ெகாள்ளளவு சுகாதாரமான நீர் சேமித்து வைக்கும் வகையில் தூர்வாரி, தூய்மைப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அவர்கள் கூறினர்.

பறவைகள் வரத்து குறைந்தது

தேரூர் குளம் புதர் மண்டியதால் வெளிநாட்டு பறவைகள் மட்டுமல்லாமல்  உள்ளூர் பறவைகளின் வரத்தும் வெகுவாக குறைந்து விட்டது. இதனால் பொதுமக்களும்  இங்கு வருவதில்லை. இதனால் குளத்தின் கரையில் கட்டப்பட்ட பறவைகள் காட்சி  கோபுரம் மது பிரியர்களின் திறந்த வெளி பாராகவும், சமூக விரோதிகளின்  கூடாரமாகவும் மாறி விட்டது. ஆகவே குளத்தை தூர்வார வேண்டும் என்று  பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

Related Stories: