வாலாஜா அருகே கல்குவாரி அமைக்க எதிர்ப்பு அலுவலகத்தை பூட்டி விஏஓ, சிப்பந்தி சிறைபிடிப்பு

வாலாஜா, அக்.16: வாலாஜா அருகே கல் குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து அலுவலகத்தில் வைத்து விஏஓவையும், சிப்பந்தியையும் பூட்டி பொதுமக்கள் சிறைபிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக 16 பேர் கைது செய்யப்பட்டனர். வேலூர் மாவட்டம், வாலாஜா அடுத்த அனந்தலை முசிறி, எடகுப்பம் உள்ளிட்ட இடங்களில் சுமார் 20 கல் குவாரிகள் இயங்கி வருகிறது. இங்கு கற்களை உடைத்து சென்னை, சித்தூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. இதற்கிடையே கல்குவாரிகளில் அதிசக்தி வாய்ந்த வெடிமருந்துகளை கொண்டு கற்களை உடைப்பதால் அதிகம் சத்தம் வருகிறது. வீடுகள் விரிசல் ஏற்படுவது மட்டுமின்றி விவசாய நிலங்களில் கற்கள் விழுந்து பயிர்கள் சேதமாகிறது. கால்நடைகள், சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது என அப்பகுதி மக்கள் தொடர்ந்து, கல்குவாரிக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் புதிதாக அப்பகுதியில் 10க்கும் மேற்பட்ட கல் குவாரிகளுக்கு டெண்டர் விடுவதற்கான பணிகளை மாவட்ட கனிம வளத்துறை, வருவாய்த்துறை மேற்கொண்டு வருகிறது. இதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதுதொடர்பாக வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்றுமுன்தினம் நடந்த குறைதீர்வு கூட்டத்திலும் புகார் அளித்தனர். இந்நிலையில் நேற்று காலை அனந்தலை விஏஓ ரமேஷ் மற்றும் சிப்பந்தி வடிவேல் ஆகியோர் கிராமத்தில் உள்ள தங்கள் அலுவலகத்தில் பணியில் ஈடுபட்டுக் கொண்டு இருந்தனர். அப்போது அங்கு வந்த கிராம மக்கள், கல்குவாரி அமைப்பது தொடர்பாக விஏஓவிடம் கேள்வி கேட்டனர்.

அப்போது இருதரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த கிராம மக்கள், விஏஓ மற்றும் சிப்பந்தியை அலுவலகத்தில் வைத்து பூட்டி சிறைபிடித்தனர். பின்னர் அனந்தலை பஸ் நிறுத்தத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்த ராணிப்பேட்டை டிஎஸ்பி கீதா, தாசில்தார் பாலாஜி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அவர்களிடமும் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தை கைவிடாததால் 16 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும், விஏஓ, சிப்பந்தியை மீட்டனர். தொடர்ந்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Related Stories: