தினக்கூலி ரூ.500 வழங்ககோரி துப்புரவு தொழிலாளர் சங்கத்தினர் போராட்டம்

திருச்சி, அக்.15: தினக்கூலி ரூ.500, 6 மாத அரியர் பணம் கேட்டு திருச்சி மாநகராட்சியில் துப்புரவு பணியாளர்கள் போராட்டம் ஈடுபட்டனர். அவர்களிடம் தீபாவளிக்குள் நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்ததை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.திருச்சி மாநகராட்சியில் 1,200க்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்கள் சுயஉதவிக்குழு மூலம் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு தினசரி ஊதியம் ரூ.360 வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் 2019-2020க்கு தினக்கூலி ரூ.500 என நிர்ணயம் செய்ததன் அடிப்படையில் 1.4.2019 முதல் ரூ.500 தினக்கூலி வழங்கிட வேண்டும் என்ற கோரிக்கையை மாநகராட்சி நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை. இந்நிலையில் நேற்று சுயஉதவிக்குழு துப்புரவு பணியாளர்களுக்கு தினக்கூலி ரூ.500 தர வேண்டும், 6மாத அரியர் பணத்தையும் வழங்கிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைளை வலியுறுத்தி சிஐடியு துப்புரவு ெதாழிலாளர் சங்கம் சார்பில் மாநகராட்சி அலுவலகத்தில் நேற்று பெருந்திரள் போராட்டம் அறிவித்திருந்தனர். இதனால் நேற்று காலைமுதல் மாநகராட்சி அலுவலகம் முன்பு போலீசார் குவிக்கப்பட்டனர். நுழைவு கேட்டுகளை பூட்டிவிட்டு பணியாளர்களை மட்டுமே அனுமதித்தனர். மனு கொடுக்க வந்தவர்களும் திருப்பி அனுப்பப்பட்டனர்.

இதையடுத்து காலை 11 மணிக்கு சிஐடியு துப்புரவு பணியாளர் சங்கத்தை சேர்ந்த சுயஉதவிக்குழு துப்புரவு தொழிலாளர்கள் மாவட்ட தலைவர் இளையராஜா தலைமையில், செயலாளர் மாறன் முன்னிலையில் மாநகராட்சி அலுவலகம் முன்பு பெருந்திரள் போராட்டம் நடத்திட 300க்கும் மேற்பட்டோர் திரண்டனர். அவர்களை உள்ளே செல்ல விடாமல் போலீசார் தடுத்தனர். இதனால் போலீசாரை கண்டித்து துப்புரவு பணியாளர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளே செல்ல அனுமதித்தனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட நிர்வாகிகளுடன், மாநகராட்சி உதவி ஆணையர்கள் திருஞானம், சண்முகம் தலைமையில் ஆகியோர் பேச்சுவார்த்தை நடைபெற்றது.இதில் தீபாவளிக்கு முன்பு ரூ.500 தினக்கூலியாக வழங்ககிடவும், 6 மாத அரியர் பணத்தை வழங்கிடவும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததால் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இச்சம்பவத்தால் மாநகராட்சி அலுவலகம் முன் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: