34 சதவீத குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு கலெக்டர் பேச்சு செஞ்சிலுவை சங்க ஜெனீவா ஒப்பந்த நாள் விழா

வேலூர், அக்.10:தமிழ்நாட்டில் 34 சதவீத குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாடுடன் பிறப்பதாக இந்திய செஞ்சிலுவை சங்கம் வேலூர் மாவட்ட கிளை சார்பில் நடந்த ஜெனீவா ஒப்பந்த நாள் விழாவில் பேசிய கலெக்டர் சண்முகசுந்தரம் குறிப்பிட்டார்.இந்திய செஞ்சிலுவை சங்கம் வேலூர் மாவட்ட கிளை சார்பில் ஜெனீவா ஒப்பந்தத்தின் 70ம் ஆண்டு நாள் விழா வேலூர் பழைய பஸ் நிலையம் செஞ்சிலுவை சங்க கட்டிடத்தில் நேற்று காலை நடந்தது. இந்திய செஞ்சிலுவை சங்க வேலூர் மாவட்ட கிளை சேர்மன் பார்வதா முன்னிலை வகித்தார். துணை தலைவர் வெங்கடசுப்பு தலைமை தாங்கினார். செயலாளர் இந்தர்நாத் வரவேற்றார்.

நிகழ்ச்சியில் இந்திய செஞ்சிலுவை சங்க மாவட்ட தலைவர் மற்றும் கலெக்டர் சண்முகசுந்தரம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார். தொடர்ந்து மாவட்டத்தில் சிறப்பாக செயல்பட்ட காட்பாடி செஞ்சிலுவை சங்கத்துக்கு சான்றிதழ் மற்றும் பரிசை செ.நா.ஜனார்த்தனனிடம் வழங்கினார்.தொடர்ந்து அவர் பேசுகையில், ‘தமிழகத்தில் 34 சதவீத குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டால் பிறக்கின்றன. பல்வேறு திட்டங்கள் மூலம் சத்தான உணவு வகைகளை வழங்கினாலும், இயற்கையாக கிடைக்கக்கூடிய பழங்களை சாப்பிடாததால் இந்த நிலை உள்ளது. அதற்காகவே மாவட்ட நிர்வாகம் சார்பில் மாவட்டத்தில் அனைத்து ஊராட்சிகளிலும் 3.5 லட்சம் பழ மரக்கன்றுகளை நடும் பணி இந்த வாரம் தொடங்க உள்ளது. இம்மரங்களை அருகில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், கிராம மக்கள் பராமரிக்க வேண்டும்’ என்று கேட்டுக் கொண்டார்.விழாவில் பல்வேறு பள்ளிகளை சார்ந்த இளம்செஞ்சிலுவை சங்க உறுப்பினர்களான மாணவ, மாணவிகள், செஞ்சிலுவை சங்க நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். பொருளாளர் பாஸ்கரன் நன்றி கூறினார்.

Related Stories: