= அஞ்செட்டி அருகே வனவிலங்கு வேட்டையாடியவர் கள்ளத்துப்பாக்கியுடன் கைது

தேன்கனிக்கோட்டை, செப்.20: அஞ்செட்டி அருகே கள்ளத்துப்பாக்கியுடன் வனவிலங்குகள் வேட்டையாடிய ஒருவரை வனத்துறையினர் கைது செய்தனர். தப்பி ஓடிய மேலும் ஒருவரை தேடி வருகின்றனர்.கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி வனச்சரக அலுவலர் ரவி, வனவர் வடிவேலு மற்றும் வனக்காப்பாளர்கள் கார்த்திகேயன், நரசிம்மன் ஆகியோரர் கொண்ட குழுவினர் நேற்று முன்தினம் அஞ்செட்டி வனச்சரக பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். பனை கிழக்கு பீட் காப்பு காடு பகுதியில் சென்றபோது துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்டுள்ளது. உடனே, அப்பகுதிக்கு விரைந்து சென்றபோது, அங்கு சுற்றிக்கொண்டிருந்த 2 பேர் வனத்துறையினரை கண்டதும் ஓட்டம் பிடித்தனர். உடனே, வனத்துறையினர் விரட்டிச்சென்று ஒருவரை மடக்கி பிடித்தனர்.

விசாரணையில், அவர் பூஞ்சோலை கிராமத்தைச் சேர்ந்த பெரியண்ணன்(61) என்பதும், தப்பி ஓடியவர் அருணாச்சலம்(35) என்பதும், அப்பகுதியில் வனவிலங்குகள் வேட்டைக்காக சுற்றி வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, பெரியண்ணனிடம் இருந்த கள்ளத்துப்பாக்கியை கைப்பற்றிய வனத்துறையினர் அவரை கைது செய்தனர். மேலும், மாவட்ட வன அலுவலர் தீபக் பில்ஜி உத்தரவின்படி வன உயிரின தடுப்பு சட்டத்தின் கீழ் பெரியண்ணன், அருணாச்சலம் மீது வழக்குப்பதிவு செய்தனர். பின்னர், பெரியண்ணனை தேன்கனிக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். தலைமறைவாக உள்ள அருணாச்சலத்தை தேடி வருகின்றனர்.

Related Stories: