கோவில்பதாகை ஏரியை ஆக்கிரமித்த கட்டிடங்களை அகற்றி 16 கோடி நிலம் மீட்பு

ஆவடி, செப். 20: ஆவடி அடுத்த கோவில்பதாகை ஏரியில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகள், சுற்றுச்சுவர்கள், எல்லை கற்கள் உள்ளிட்டவைகளை வருவாய்த்துறை அதிகாரிகள் அதிரடியாக அகற்றி ₹16 கோடி மதிப்பிலான நிலத்தை மீட்டனர்.

ஆவடி அடுத்த கோவில்பதாகை ஏரியை ஆக்கிரமித்து புதிய கட்டிடங்கள் கட்டப்பட்டு வருவதாக திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமாருக்கு புகார்கள் சென்றன. இதனையடுத்து அவர், ஆவடி வருவாய் துறை அதிகாரிகளுக்கு ஏரியை ஆய்வு செய்ய உத்தரவிட்டார். இதன்படி நேற்று காலை ஆவடி தாசில்தார் சரவணன், துணை தாசில்தார் செந்தில்குமார், வருவாய் ஆய்வாளர் செல்வராஜ் ஆகியோர் தலைமையில் வருவாய்த்துறை ஊழியர்கள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது ராஜீவ் காந்தி நகர் பகுதியில் ஏரியை ஆக்கிரமித்து புதிய வீடுகள், காம்பவுன்ட் சுவர் கட்டப்பட்டும், எல்லை கற்களை அமைத்து இருப்பதும் தெரியவந்தது.

இதனையடுத்து வருவாய்த்துறை அதிகாரிகள் பொக்லைன் இயந்திரம் கொண்டு வந்து ஏரியை ஆக்கிரமித்த கட்டிய கட்டிடங்களை இடித்து தள்ளினர். மேலும், ஊழியர்கள் உதவியுடன் எல்லை கற்களையும் அப்புறப்படுத்தினர். இதில் 4 வீடுகள், 3 சுற்றுச்சுவர்கள், 2 கிணறுகள், 250 எல்லை கற்கள் ஆகியவை அடங்கும். மேற்கண்ட ஏரி ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் ₹16 கோடி மதிப்பில் இரண்டரை ஏக்கர் நிலம் மீட்கப்பட்டது. இதுகுறித்து வருவாய்த்துறை உயரதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘ஏரியை ஆக்கிரமித்து 800க்கும் மேற்பட்ட வீடுகள் கட்டப்பட்டுள்ளது. இதுகுறித்து ஆக்கிரமிப்பாளர்களுக்கு முறையாக நோட்டீஸ் கொடுத்து உள்ளோம். அவர்களாகவே முன்வந்து கட்டடங்களை அகற்ற வேண்டும். இல்லாவிட்டால் போலீஸ் பாதுகாப்புடன் வருவாய்த்துறை அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் விரைவில் ஈடுபடுவோம். மேலும், நீர் நிலைகளை ஆக்கிரமித்து கட்டிடங்கள் கட்டும் நபர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றனர்.

Related Stories: