ஊத்துக்கோட்டை பேரூராட்சியில் புதர்மண்டி கிடக்கும் கால்வாய்: நீரோட்டம் தடைபடும் அபாயம்

ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை பேரூராட்யில் பராமரிப்பு இல்லாமல் புதர்மண்டி கிடக்கும், ஏரிக்கால்வாயை சீரமைக்க விவசாயிகள்  கோரிக்கை விடுத்துள்ளனர்.ஊத்துக்கோட்டை பேரூராட்சியில் மிகப்பெரிய ஏரியான   914 ஏக்கர்  கொண்ட ஈசா ஏரி உள்ளது. மழை காலங்களில் ஆந்திரா மாநிலம் பிச்சாட்டூர் ஏரியில்  மழைநீர் நிரம்பியதும் மதகு திறக்கப்பட்டால் சுருட்டப்பள்ளி அணையை வந்தடையும். அங்கு தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டு கால்வாய் வழியாக ஊத்துகோட்டை ஏரிக்கு தண்ணீர்  திறக்கப்படும். இந்த ஏரியில் தண்ணீர் நிரம்பியதும் தாராட்சி, பேரண்டூர், பாலவாக்கம், சிங்கிலி குப்பம், செஞ்சியகரம், முக்கரம்பாக்கம் என 14 ஏரிக்கு தண்ணீர் திறக்கப்படும்.இந்த தண்ணீர் அனைத்தும் விவசாயத்திற்கு பயன்படுத்தப்படுகிறது. இது விவசாயிகளுக்கு முக்கிய நீர் ஆதாரமாகும்.  இந்நிலையில் சுருட்டப்பள்ளி அணைக்கட்டில் இருந்து ஊத்துக்கோட்டை ஏரி வரை உள்ள கால்வாய் முட்புதர்கள் மண்டிக்கிடக்கிறது.

மேலும், அதுமட்டுமல்லாமல் கால்வாய் கரை ஓரத்தில் உள்ள வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீரும், நாகலாபுரம் சாலை, சத்தியவேடு சாலை  ஓரங்களில் செல்லும் பேரூராட்சி சார்பில் கட்டப்பட்ட கால்வாயிலிருந்து வெளியேறும் கழிவுநீரும் இந்த ஏரிக்கால்வாயில் தான் கலக்கிறது.  இதனால் ஏரிக்கு செல்லும் மழைநீருடன் கழிவுநீரும் கலப்பதால் ஏரி நீர் மாசு அடையும் நிலை உள்ளது.  அதுமட்டுமல்லாமல் இந்த நீர் வயலுக்கு செல்லும் போது பயிர்கள் அழுகும் நிலை ஏற்படும்.எனவே, சுருட்டப்பள்ளி முதல் ஊத்துக்கோட்டை ஏரி வரை உள்ள கால்வாயை தூர்வாரி சுத்தம் செய்ய சம்மந்தப்பட்ட அதிகாரிகள்   நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், சத்தியவேடு சாலையில் உள்ள பாலத்தின் கீழே அப்பகுதியை சேர்ந்த சிலர் குப்பை கழிவுகளை கொட்டுகிறார்கள்.  இந்த குப்பை கழிவுகள்  கால்வாயில் தண்ணீர் வரும்போது ஏரிக்கு அடித்துச்செல்கிறது. எனவே  சம்மந்தப்பட்ட அதிகாரிகள் ஊத்துக்கோட்டை ஈசா ஏரி கால்வாயை  தூர் வார வேண்டும்  என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘‘சுருட்டப்பள்ளி அணைக்கட்டு பகுதியில் இருந்து ஊத்துக்கோட்டை ஈசா ஏரிக்கு செல்லும் கால்வாய் புதர்கள் மண்டி காட்சியளிக்கிறது.  மேலும், கால்வாய் கரை ஓரத்தில் வசிக்கும் குடியிருப்புவாசிகள் கால்வாயில் கழிவுநீரை விடுகிறார்கள். எனவே மழை காலம் தொடங்கி உள்ள நிலையில் சுருட்டபள்ளியிலிருந்து  ஊத்துக்கோட்டைக்கு செல்லும் கால்வாயை சீரமைக்க வேண்டும்’’ என்றனர்.

Related Stories: