குமரியில் 3,500 லாரிகள் வேலை நிறுத்தத்தில் பங்கேற்பு

நாகர்கோவில், செப்.20:  குமரியில் வேலை நிறுத்த போராட்டத்தில் 3,500 லாரிகள் பங்கேற்றன.

வாகன சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெற வேண்டும். சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வை குறைப்பதுடன், 40 கி.மீட்டருக்கு ஒரு சுங்கச்சாவடி என்றில்லாமல், அவற்றின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும். மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடும் அபராத தொகையை சீரமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி் அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் நேற்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்திருந்தது. இதன்படி குமரியில், நாகர்கோவில் உள்ளூர் லாரிகள் உரிமையாளர்கள் சங்கம் மற்றும் கன்னியாகுமரி மாவட்ட  லாரி உரிமையாளர் மற்றும் ஒட்டுநர் சங்கத்தை சேர்ந்த லாரிகள் நேற்றைய வேலை  நிறுத்தத்தில் பங்கேற்றன. இதனால், குமரியில் உள்ள சுமார், 7 ஆயிரம் லாரிகள் மற்றும் டெம்போக்களில் சுமார் 3,500 லாரிகள் மற்றும் டெம்போக்கள் இயங்கவில்லை. நாகர்கோவிலில் வெட்டூர்ணிமடம் உள்பட பல பகுதிகளில் லாரிகள் ஓரமாக நிறுத்தப்பட்டிருந்தன. இதனால், சுமார் ₹2 கோடி மதிப்புள்ள சரக்குகள் தேக்கம் அடைந்துள்ளதாக லாரி உரிமையாளர் சங்க நிர்வாகிகள் கூறினர்.  

தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சங்கம் போராட்டத்தில் ஈடுபடவில்லை என்பதால், பாதிக்கும் மேற்பட்ட லாரிகள் இயங்கின. இதுபற்றி கன்னியாகுமரி மாவட்ட லாரி உரிமையாளர் மற்றும் ஓட்டுநர் சங்க தலைவர் குமரேசன் கூறியதாவது: வாகன சட்ட திருத்தம் ரத்து, சுங்க சாவடிகள் எண்ணிக்கை குறைப்பு, பழைய வாகனங்களுக்கு வேகக் கட்டுப்பாடு கருவி கட்டாயம் செய்யக்கூடாது. மாநிலத்திற்கு மாநிலம் அபராத  கட்டணம் வேறுபாடு போன்றவற்றை ரத்து செய்யக்கேட்டு அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் அறிவித்துள்ள ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் நாங்கள் பங்கேற்றுள்ளோம். தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சங்கத்தை சேர்ந்த லாரிகள் ஓடினாலும், அவர்களும் இதே கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக முதல்வரை சந்திக்க உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: