கொல்லம் - பகவதிபுரம் பகுதிகள் திருவனந்தபுரம் கோட்டத்துடன் இணைக்கப்படும் குமரி மாவட்ட ரயில்வே பகுதிகள் மதுரை கோட்டத்துடன் இணைகிறது ரயில்வே நடவடிக்கைகள் தொடக்கம்

நாகர்கோவில், செப்.20: திருவனந்தபுரம் கோட்டத்தின் கீழ் வருகின்ற குமரி மாவட்ட ரயில்வே பகுதிகளை மதுரை ேகாட்டத்துடன் இணைக்கும் நடவடிக்கைகளை தெற்கு ரயில்வே மீண்டும் தொடங்கியுள்ளது.திருவனந்தபுரம் ரயில்வே கோட்ட பகுதிகள், மதுரை கோட்டத்திற்கு மாற்றப்படாது என்று ரயில்வே அறிவித்தது. இது தொடர்பாக ரயில்வே வாரிய தலைவர் கேரள அரசிடம் உறுதியளித்திருந்தார். இந்தநிலையில் மீண்டும் ரயில்வே கோட்ட மாற்றத்திற்கான பணிகளை ரயில்வே தொடங்கியுள்ளது. திருவனந்தபுரம்-நாகர்கோவில்-திருநெல்வேலி, நாகர்கோவில்-கன்னியாகுமரி பிரிவுகள் திருவனந்தபுரம் கோட்டத்தில் இருந்து மதுரை ேகாட்டத்துடன் இணைக்கப்படும்.அதற்கு பதிலாக மதுரை கோட்டத்தின் கீழ் உள்ள பகவதிபுரம்-கொல்லம் பிரிவு திருவனந்தபுரம் கோட்டத்துடன் இணைக்கப்படும். முன்னதாக இது தொடர்பாக ரயில்வே வாரியம் அனுப்பிய கடிதம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் இது தொடர்பான நடவடிக்கைகள் அப்போது நிறுத்தி வைக்கப்பட்டன.திருவனந்தபுரம் கோட்டத்தில் 160 கி.மீ தூர ரயில்பாதை மதுரை கோட்டத்துடன் இணைக்கப்படும். 89 கி.மீ ரயில்பாதை திருவனந்தபுரத்திற்கு வழங்கப்படும். இதில் கொல்லம்-பகவதிபுரம் ரயில்பாதை போதிய வருவாய் இல்லாத பகுதி என்று கூறி இதற்கு கேரளம் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. வருவாய் உள்ள செங்கோட்டை, தென்காசி பிரிவுகள், கன்னியாகுமரி, நாகர்கோவில் பிரிவுகள் மதுரை கோட்டத்துடன் இணைக்கப்படுகிறது என்பது அவர்களின் குற்றச்சாட்டு ஆகும்.

விழிஞ்ஞம் -பாலராமபுரம் ரயில்பாதை, நேமம் டெர்மினல் ஆகியவை திருவனந்தபுரம் கோட்டத்தில் இருந்து மதுரை கோட்டத்துடன் இணைக்கவும் ரயில்வேயிடம் திட்டம் உள்ளது. இதுவும் திருவனந்தபுரம் கோட்டத்திற்கு ெபரும் இழப்பாக கருதப்படுகிறது.

கோட்டத்தில் மாற்றம் தொடர்பாக தொழில்நுட்ப பிரச்னைகள் ஏதும் இல்லை என்று ரயில்வே தலைமை போக்குவரத்து திட்ட மேலாளர் ரயில்வே வாரியத்திற்கு கடிதம் எழுதியுள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. எலெக்ட்ரிக்கல் பிரிவுக்கு இது தொடர்பாக ஏதேனும் சிக்கல்கள் இருக்கிறதா என்பது தெரியவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.திருவனந்தபுரம் கோட்டத்தில் அதிக வருவாய் உள்ள ரயில் நிலையங்களில் ஒன்றாக நாகர்கோவில் ரயில்நிலையம் இருந்து வருகிறது. கன்னியாகுமரி ரயில் நிலையம் வழியாகவும் கணிசமான வருவாய் கிடைத்து வருகிறது. இருப்பினும் நாகர்கோவில், கன்னியாகுமரி ரயில் நிலையங்களில் அடிப்படை வசதிகள் என்பது பெரும் கேள்விக்குறியாகவே இருந்து வருகிறது. இந்த ரயில் நிலையங்களை கேரளா தங்களது தேவைகளுக்காக முழுமையாக பயன்படுத்தி வருகிறது. ரயில்கள் பழுது பார்த்தலுக்கு நாகர்கோவில் கொண்டுவருதல், கழுவி சுத்தப்படுத்த எடுத்து வருதல் போன்றவை தற்போது நடைபெற்று வருகிறது. கோட்ட மாற்றம் ஏற்பட்டால் இந்த பணிகள் நிறுத்தப்படும். இதனால் நெருக்கடி குறையும். இதன் வாயிலாக சென்னை உள்ளிட்ட இடங்களுக்கு கன்னியாகுமரியில் இருந்தும், நாகர்கோவிலில் இருந்தும் கூடுதல் ரயில்கள் புதியதாக இயக்க வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories: