வந்தவாசி அருகே பாகப்பிரிவினை தகராறில் தாயை தாக்கிய மகன் கைது

வந்தவாசி, செப்.20: வந்தவாசி அருகே நிலம் பாகப்பிரிவினை தகராறில் தாயை தாக்கிய மகனை போலீசார் கைது ெசய்தனர். தலைமறைவாக உள்ள மருமகளை தேடி வருகின்றனர். வந்தவாசி அடுத்த புலிவாய் கிராமத்தை சேர்ந்தவர் லட்சுமி அம்மாள்(60). இவருக்கு தர்மலிங்கம், வாசு என்ற மகன்களும், வித்யா, சிந்தாமணி என்ற மகள்களும் உள்ளனர். அனைவருக்கும் திருமணம் ஆகி தனித்தனியாக வசித்து வருகின்றனர். லட்சுமி அம்மாளின் கணவர் நடராஜன் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இவர்களுக்கு சொந்தமான 4 ஏக்கர் நிலத்தில் மூத்த மகன் தர்மலிங்கம் விவசாயம் செய்து வந்தார். இந்நிலையில், மூத்த மகள் வித்யா திருமணத்தின் போது நகைகள் போடாததால், நிலத்தை விற்பனை செய்து அவருக்கு கூடுதலாக பணம் கொடுக்கலாம் என லட்சுமி அம்மாள் கூறினாராம். இதற்கு தர்மலிங்கம் எதிர்ப்பு தெரிவித்து பாகப்பிரிவினை செய்யாமல் தடுத்து வந்தாராம். இதையடுத்து, 5 பேருக்கும் விவசாய நிலத்தை பாகப்பிரிவினை செய்வது தொடர்பாக, லட்சுமியம்மாள் வந்தவாசி கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நிலுவையில் உள்ளது.

இந்நிலையில், கடந்த மாதம் 28ம் தேதி லட்சுமி அம்மாள் தனது வீட்டை பூட்டி கொண்டு வந்தவாசிக்கு வந்தார். பின்னர், வீட்டுக்கு சென்று பார்த்தபோது பூட்டை உடைத்து வீட்டின் உள்ளே மூத்த மகன் தர்மலிங்கம்(38), அவரது மனைவி சுந்தரி(33) ஆகிய இருவரும் அமர்ந்திருந்தனர்.

பின்னர், இங்கு ஏன் வந்தீர்கள்? என லட்சுமி அம்மாள் கேட்டதால் ஆத்திரமடைந்த தர்மலிங்கம், சுந்தரி ஆகிய இருவரும் அவரை சரமாரி தாக்கியதாக கூறப்படுகிறது. இதில், காயம் அடைந்த லட்சுமி அம்மாள் சிகிச்சைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு மாற்றம் செய்யப்பட்டார். இதுகுறித்து லட்சுமிஅம்மாள் நேற்று முன்தினம் வந்தவாசி வடக்கு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் மோகன் வழக்குப்பதிந்து தர்மலிங்கத்தை கைது செய்தார். மேலும், தலைமறைவாக உள்ள சுந்தரியை தேடிவருகிறார்.

Related Stories: