செய்யாறு அடுத்த கீழ்புதுப்பாக்கத்தில் 9 மாதமாக குடிநீர் இல்லை... 7 முறை மனு அளித்தும் பலனில்லை...

செய்யாறு, செப்.20: செய்யாறு அடுத்த கீழ்புதுப்பாக்கம் கிராமத்தில் 9 மாதமாக குடிநீர் முறையாக விநியோகம் செய்யவில்லை. இதுகுறித்து அதிகாரிகளிடம் 7 முறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் நேற்று திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். செய்யாறு நகரை ஒட்டி கீழ்புதுப்பாக்கம் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தின் விரிவு பகுதிகளான வள்ளலார் தெரு, அதியமான் தெரு, அவ்வையார் தெரு, கன்னியம்மன் ெதரு உள்ளிட்ட 9க்கும் மேற்பட்ட தெருக்களில், கடந்த ஜனவரி மாதம் முதல் குடிநீர் விநியோகம் செய்யவில்லை. இதனால் அவதிக்குள்ளான பொதுமக்கள் அப்போதைய செய்யாறு பிடிஓவிடம் 4 முறை மனு அளித்தனர். மேலும், ஜனவரி, ஆகஸ்ட் மாதங்களில் நடந்த கிராம சபா கூட்டங்கள், நீர் மேலாண்மை குறித்த சிறப்பு கிராம சபா கூட்டத்திலும் மனு அளித்தனர். 7 முறை மனு அளித்தும் குடிநீர் பிரச்னையை தீர்க்க அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையாம்.

இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதியை சேர்ந்த பெண்கள் உட்பட 75க்கும் மேற்பட்டோர், நேற்று காலை 11 மணியளவில் செய்யாறு- ஆற்காடு சாலை வள்ளலார் தெரு சந்திப்பில் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்த பிடிஓ மயில்வாகனன், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பழனிச்சாமி வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பிடிஓ, சில நாட்களில் குடிநீர் கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இதையேற்று பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். மறியல் காரணமாக அப்பகுதியில் சுமார் 30 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related Stories: