2 மாத நிலுவை தொகை வழங்க வலியுறுத்தி கூட்டுறவு சங்கத்தை பால் உற்பத்தியாளர்கள் முற்றுகை

ஆரணி, செப்.20: ஆரணி பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில், 2 மாத நிலுவை தொகை வழங்க வலியுறுத்தி நேற்று பால் உற்பத்தியாளர்கள் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ஆரணி ஆரணிப்பாளையம் ஆறுமுகம் தெருவில் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் செயல்பட்டு வருகிறது. இந்த சங்கத்தில் ஆரணி, இரும்பேடு, சேவூர், மெய்யூர் உட்பட 15க்கும் மேற்பட்ட பகுதிகளில் இருந்து, நாள்தோறும் 6 ஆயிரம் முதல் 7 ஆயிரம் லிட்டர் வரை பால் கொள்முதல் செய்யப்படுகிறது. பின்னர், வேலூர், சென்னை அம்பத்தூர் ஆவின் பால் உற்பத்தி நிறுவனத்திற்கு அனுப்பப்படுகிறது. இந்நிலையில், தமிழக அரசு கடந்த மாதம் பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு ₹4 உயர்த்தி, பால் உற்பத்தியாளர்களுக்கு 32 வழங்க உத்தரவிட்டது. ஆனால், ஆரணி பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில், பழைய விலைக்கே கொள்முதல் செய்து, நுகர்வோர்களுக்கு புதிய விலைக்கு விற்கப்படுவதாக கூறப்படுகிறது. மேலும், பால் உற்பத்தியாளர்களிடம் கொள்முதல் செய்த பாலுக்கு கடந்த 2 மாதங்களாக பணம் சரிவர வழங்கவில்லையாம்.

இதனால் ஆத்திரமடைந்த பால் உற்பத்தியாளர்கள் நேற்று, ஆரணி பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, 2 மாதமாக நிலுவையில் உள்ள பணத்தை வழங்க வேண்டும், அரசு நிர்ணயித்த பால் கொள்முதல் விலையை உயர்த்தி உடனடியாக வழங்க வேண்டும் என கோஷமிட்டனர். இதுகுறித்து பால் உற்பத்தியாளர்கள் கூறுகையில், பால் கொள்முதல் விலையை அரசு உயர்த்தியும் இதுவரை எங்களுக்கு கிடைக்கவில்லை. 2 மாதங்களாக கொள்முதல் செய்ததற்கு இதுவரை பணம் வழங்கவில்லை. சங்க செயலாளரிடம் கேட்டால், கொடுக்கும் பணத்தை வாங்கி கொள்ள வேண்டும். பிரச்னை செய்தால் 3 மாதங்கள் ஆனாலும் பணம் வாங்க முடியாது என்கிறார்' என்றனர்.

Related Stories: